ப்ரெண்ட்ஷிப் – திரைப்பட விமர்சனம்
இயந்திரப் பொறியியல் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) துறையில் படிக்கும் மாணவர்களாக ஹர்பஜன்சிங், சதீஷ், வெட்டுக்கிளி பாலா மற்றும் நண்பர்கள். அந்த வகுப்பில் ஒரே ஒரு மாணவியாக வந்து சேர்கிறார் லாஸ்லியா.
இவர்களுக்குள் தொடக்கத்தில் மோதல் பின்பு நட்பு அதன்பின் ஏற்படும் உறவு அவற்றிற்குப்பின்னான அதிர்ச்சி என அடுத்தடுத்துப் பல உணர்வுகளைக் கடத்தும் படம்தான் ப்ரெண்ட்ஷிப்.
புகழ்பெற்ற மட்டைப்பந்து வீரர் ஹர்பஜன்சிங் கதாநாயகன். துடிப்பான மாணவராக நடிக்க முயன்றிருக்கிறார். அவரைக் கதாநாயகனாக்கிவிட்டு மட்டைப்பந்தாட்டம் இல்லையென்றால் எப்படி? எனக்குத் தெரியாத கிரிக்கெட்டா? என அலட்சியம் காட்டாமல் அக்காட்சிகளிலும் சிரத்தையாக நடித்து தன் ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஹர்பஜன் புதியவர் என்பதால் சதீஷுக்கு வசதியாகப் போய்விட்டது. அவரே அதிக வாய்ப்புகளை எடுத்துக்கொண்டுவிட்டார். அதனால் அங்கங்கே சிரிக்க முடிகிறது.
எதிர்பார்க்கப்பட்ட புதுவரவு லாஸ்லியா ஏமாற்றவில்லை. நட்புக்குள் ஆண் பெண் பேதம் தேவையில்லை என்பதை வசனங்களிலும் நடிப்பிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
முக்கிய வேடத்தில் அர்ஜூன் நடித்திருக்கிறார். கொஞ்ச நேரம் வந்தாலும் அவர் வருகிற காட்சிகள் விறுவிறுப்பு.
வில்லனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே கண்களாலேயே மிரட்டுகிறார்.
ஜீவாரவி, படவா கோபி, எம்.எஸ்.பாஸ்கர்,வெட்டுக்கிளிபாலா உள்ளிட்டோர் அவரவர் வேடத்துக்கு அட்சர சுத்தமாகப் பொருத்தமாக இருக்கிறார்கள்.
டிஎம் உதயகுமாரின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.
சாந்தகுமாரின் ஒளிப்பதிவு நன்று. கணினி வரைகலைக்காட்சிகள் அபத்தம்.
ஜேபிஆர் மற்றும் ஷாம்சூர்யா ஆகிய இரட்டை இயக்குநர்கள், ஆண் பெண் நட்பு, பெண்கள் பாதுகாப்பு ஆகிய விசயங்களைப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து கொடுத்திருக்கின்றனர்.











