விமர்சனம்

நான் சிரித்தால் – திரைப்பட விமர்சனம்

இரண்டு பெரிய ரவுடிகளுக்கிடையே நடக்கும் அதிகாரப் போட்டியில் தவறுதலாகச் சிக்கிக் கொள்ளும் ஒரு விநோத நோயாளியின் கதைதான் நான் சிரித்தால்.

சோகம்,துக்கம்,பயம் ஆகியன வந்தால் அடக்கமுடியாமல் சிரிக்கும் விநோத நோய் கொண்டவர் ஹிப்ஹாப்தமிழா ஆதி. இதன் காரணமாக அவர் சந்திக்கும் சிக்கல்கள்தாம் திரைக்கதை.

ஹிப்ஹாப்தமிழா ஆதி வழக்கம் போலவே துறுதுறுப்புடன் ஓடுகிறார் ஆடுகிறார் பாடுகிறார். இந்தப்படத்தில் ரஜினி போல் தன்னைக் காட்டிக்கொள்ள முயன்றிருக்கிறார். 

வில்லன்களிடம் அடிவாங்கி வாயெல்லாம் இரத்தம் வழிய அவர் சிரிக்கும்போது பாட்ஷா படத்தின் பாட்டைப் போட்டுவிடுவார்களோ என்ற எண்ணம் வருகிறது. ஆனால் ஒரு மாற்றமாக அப்படத்தின் வசனத்தைப் போட்டு தன்னை ரஜினியாக்கிக் கொள்கிறார் ஹிப்ஹாப்.

கடைசியில் கருத்து சொல்வதெல்லாம் கொஞ்சம் அதிகம். அதற்காகவே அர்ச்சனா பங்குபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சி வைத்திருக்கிறார்கள்.

நாயகி ஐஸ்வர்யாமேனன் வழக்கமான காதலி வேடத்தில் வருகிறார். நடிப்பைக் காட்டிலும் அவருடைய இடையழகை நம்பியிருக்கிறது படக்குழு.

கே.எஸ்.ரவிகுமார், ரவிமரியா, முனீஸ்காந்த், சாரா,படவா கோபி உள்ளிட்டோரின் வேடங்கள் மக்கள் சிரிப்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன.ஆனால் சில இடங்களிம் மட்டும் சிரிப்பு வருகிறது. 
வாஞ்சிநாதனின் ஒளிப்பதிவு மிகையில்லாமல் இருக்கிறது.

ஹிப்ஹாப்தமிழாஆதியின் இசையில் பாடல்கள் ஒரேமாதிரியாக இருக்கின்றன. காதல்முறிவுப் பாடல் கவனிக்க வைக்கிறது.

கெக்க பிக்கே என்கிற குறும்படத்தை இயக்கிய ராணா அதையே ஆதியை நம்பி முழுநீளப்படமாக மாற்றியிருக்கிறார்.அதனால் இந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது அதுவே ஏமாற்றத்துக்கும் காரணமாக இருக்கிறது.

Related Posts