விமர்சனம்

அசுரன் – திரைப்பட விமர்சனம்

வெக்கை எதார்த்தமாகப் பிறந்ததுதான். பெரிய பின்னணி எதுவும் கிடையாது. நானறிய நடந்த கதை. பசுமையான இலையைப் பூச்சி கொறித்தது போல் ஒரு சிறுவனுக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்களைக் கோர்த்து அவனது மனவெக்கையுடன் சொல்லனுமென்று ரெம்ப நாளாக எனக்குள் ஒரு துடிப்பு. மலங்காடு, மயானம், கண்மாய், அய்யனார் கோயில் என்று நான் சுற்றித் திரிந்த எனது இளமைக்கால அனுபவங்களைக் கொலைச் சம்பவத்துடன் பொருத்திப் பார்த்தேன். ஆழ்ந்த ஈடுபாட்டுடன் எழுத முடிந்தது. கொலை செய்தது சிதம்பரம். காட்டுக்குள் திரிந்தது நான் – பூமணி வெக்கை நாவல் பற்றி.  

பூமணியின் வெக்கையை மூலக்கதையாக எடுத்துக் கொண்டு திரையில் வெற்றிமாறன் எழுதியிருக்கும் நாவல்தான் அசுரன்.

படம் தொடங்கியவுடன் நீரோடைக்குள் இறங்கி மெதுவாக நடக்கிறார்கள் நாற்பத்தைந்து வயது தனுஷும் அவருடைய பதினாறு வயது மகன் கென் கருணாஸும்.

அவர்கள் பின்னாலேயே பார்வையாளர்களையும் அழைத்துச் செல்கிறார்கள் கடைசி வரை.

திருமண வயதில் உள்ள மகன் உட்பட மூன்று குழந்தைகளுக்குத் தந்தை என்கிற மிகப்பெரிய பொறுப்பை பொறுப்புடன் சுமந்திருக்கிறார் தனுஷ். 

தனுஷ் ஏற்று நடித்திருக்கும் சிவசாமி என்கிற கதாபாத்திரம் அனுபங்களில் பயின்ற அறிவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் ஒவ்வொரு கணமும் சிலிர்ப்பு. 

நடுத்தர வயது தந்தை, இளம் வாலிபன், காதலன், கணவன், மச்சான், நண்பன் என எல்லாமுமாக தனுஷ் நிறைந்திருக்கிறார். இப்படி ஒரு பாத்திரத்தை ஏற்றுக் கொண்டதற்காகவே தனுஷை பாராட்டலாம். சிறப்பாக நடித்து கூடுதல் பாராட்டு பெறுகிறார்.

சாடிக்கேத்த மூடி போல மஞ்சுவாரியர். கசங்கிய ரவிக்கையும் பருத்திப் புடவையும் சரியாக முடியாத கூந்தலுமாக கோவில்பட்டி பகுதிப் பெண்களைப் பிரதியெடுத்திருக்கிறார்.வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் தப்பு நடக்கும்போது  பெரிய குடும்பத்தினர் என்றும் பாராமல் எதிர்த்து நிற்பது மகனுக்கு ஆபத்து எனும்போது கலங்கி நிற்பது உட்பட எல்லாக்காட்சிகளிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

தனுஷின் மூத்த மகனாக வருகிற டீஜே அருணாசலம் கவனிக்க வைக்கிறார். அவருடைய மரணம் கலங்க வைக்கிறது.
 
முதல்காட்சியிலிருந்து கடைசிக்காட்சி வரை தனுஷ் உடனேயே வருகிற இளையமகன் கென் கருணாஸுக்கு சிறந்த அறிமுகம். அவரும் நன்றாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.

கொஞசநேரமே வந்தாலும் அம்முஅபிராமி அசத்தியிருக்கிறார். செருப்புப் போட்டு பெருமிதமாய் நடக்கும் அவருக்கு அதனாலேயே பெரும் அவமானம் எனும்போது இப்படிப்பட்ட சமூகத்தில்தான் வாழ்கிறோம் என்கிற வெட்கம் ஏற்படுகிறது.

பசுபதி, ஆடுகளம் நரேன், பவன், நிதீஷ்வீரா, ஏ.வெங்கடேஷ்,சுப்பிரமணியம் சிவா, பாலாஜி சக்திவேல்,பிரகாஷ்ராஜ் ஆகியோர் கொடுத்த வேடங்களுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

வேல்ராஜின் ஒளிப்பதிவுக்கருவி காட்சிகளின் தன்மைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறது. பொறுப்பான பஞ்சாயத்தாராக சில காட்சிகளில் நடித்துமிருக்கிறார் வேல்ராஜ்.

படம் தொடக்கத்திலிருந்தே தன் ஆளுமையை வெளிப்படுத்துகிறார் ஜீ.வி.பிரகாஷ். அவரது இசை கதை சொல்கிறது. இவ்வளவு திறமைகளை அவர் ஒளித்து வைத்திருப்பது ஏனோ?

படத்தொகுப்பாளர் ராமரும் கலை இயக்குநர் ஜாக்கியும் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

வசனங்களை எழுதியிருக்கும் சுகா படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார்.
 
நிலமிருந்தா பறிச்சுக்குவாங்க பணமிருந்தா பிடுங்கிக்குவாங்க படிப்பிருந்தா ஒண்ணும் செய்ய முடியாது என்பதை அடித்தட்டு மக்களுக்கான தீர்வாகச் சொல்லும் அதேநேரம்,
பகையை எதிர்க்காம கடந்து போவோம் ஏன்னா ஒரே மண்ணுல பொறந்தோம் ஒரே மொழி பேசறோம் இதவிட வேறென்ன வேணும் என்று தனுஷின் குரல்களில் தம் கருத்தை வெளிப்படுத்தியிருக்கும் வெற்றிமாறனுக்கு பாராட்டுகள்.

Related Posts