சினிமா செய்திகள்

பெரிய விலைக்கு விற்பனை ஆனது சூரியின் கருடன் – படக்குழு உற்சாகம்

நகைச்சுவை நடிகராகப் புகழ் பெற்றிருந்த சூரி இப்போது கதாநாயகன் ஆகிவிட்டார்.

அவர் கதாநாயகனாக நடித்த முதல்படம் விடுதலை.அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சூரிக்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுத்தந்தது.

அதைத் தொடர்ந்து விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்கள் அவருக்கு இருக்கின்றன.

இவற்றோடு இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும்’கருடன்’திரைப்படமும் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.

இப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.‌ இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியிருக்கிறார் என்பது தனிச்சிறப்பு.

ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்புப் பணிகளைக் கையாள, ஜி.துரைராஜ் கலை இயக்கப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.‌இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து, இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் முதல்பார்வை மற்றும் கிளிம்ப்ஸ் எனப்படும் சில காட்சிகள் சனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதோடு வியாபார வட்டத்திலும் இந்தப்படத்தை வாங்கி வெளியிடப் பலர் முன்வந்தனராம்.

இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை ஏற்கெனவே விற்பனையான நிலையில் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையும் விற்பனையாகியுள்ளது.

மே 10 ஆம் தேதி மாலை படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ஃபைவ் ஸ்டார் செந்தில் பெற்றுள்ளார்.

அதோடு இம்மாதமே இப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப்படத்தின் தமிழ்நாடு வியாபாரம் பெரும் தொகைக்கு விற்பனை ஆகியிருக்கிறது. தொகை குறித்து அவர்கள் அறிவிக்கவில்லையெனினும் சுமார் பதினாறு கோடிக்கு இப்படம் வியாபாரம் ஆகியிருக்கிறதென்றும் இது யாரும் எதிர்பாராத பெரிய விலை என்றும் வியாபார வட்டத்தினர் கூறுகின்றனர்.

இதனால் நாயகன் சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Posts