சினிமா செய்திகள்

அரசு ஒதுக்கிய பொதுநிலம் தன்வயப்படுத்திய செல்வமணி – புதிய சர்ச்சை

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு சின்னத்திரை நடிகர்கள் சங்கம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கு இணங்க, உறுப்பினர்கள் நலன்கருதி குடியிருப்பு கட்டிடங்களை கட்டிக்கொள்ள ஏதுவாக செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 90 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய்க்கு, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்க அரசாணை கடந்த 2010-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியால் வெளியிடப்பட்ட இந்த அரசாணைப்படி, 3 ஆண்டுகளில் அங்கே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வேண்டும்.

ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் பயனாளிகள் குடியிருப்புகளை கட்ட இயலாத காரணத்தால், கட்டுமானங்களை மேற்கொள்ள அரசாணையை புதுப்பித்து தருமாறு தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திரைத்துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் ஆய்வுப்பணிகள், சட்டரீதியான ஆலோசனைகள் உள்ளிட்டவை அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து பையனூரில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியால் வழங்கப்பட்ட குத்தகை நிலத்தின் பயன்பாட்டை நீட்டித்து, 3 ஆண்டுகளுக்குள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கி புதிய அரசாணையை தமிழ்நாடு அரசு பிப்ரவரி 20 அன்று வெளியிட்டது.

இந்த அரசாணையை திரைத்துறையினர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பெற்றுக் கொண்டனர்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம்,

கலைத்துறையின் முன்னேற்றத்துக்காகவும், திரைக் கலைஞர்களின் நலனிலும் முழு அக்கறையோடு திமுக அரசு எப்போதுமே செயல்பட்டிருக்கிறது. அந்தவகையில் திரைத்துறையினருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட இடத்தில் கட்டுமானங்களை மேற்கொள்ள அரசாணையில் திருத்தம் வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையின் முக்கியத்துவத்தை அறிந்து முதல்வர், அரசாணையை புதுப்பிக்க உத்தரவிட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கிய அந்த 90 ஏக்கர் இடத்தின் இன்றைய மதிப்பு ரூ.180 கோடியாகும்.
ஆனாலும் அதே இடத்தை திரைத்துறையினரில் நலன் கருதி, அவர்களிடமே குத்தகைக்கு விட்டிருக்கிறோம். இதன்மூலம் அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை அவர்கள் கட்டிக்கொள்ளலாம். இதனால் 40 ஆயிரம் கலைஞர்கள் பயனடையவுள்ளனர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதுப்பிக்கப்பட்ட அரசாணையின் மூலம் இடத்தினைப் பெற்ற திரைத்துறைச் சங்கத்தினருக்கு எனது வாழ்த்துக்கள்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த மகிழ்ச்சியான செய்தி வெளியானவுடனே அதுகுறித்த சர்ச்சையும் வெளிப்பட்டிருக்கிறது.

என்ன சர்ச்சை?

இந்த பையனூர் நிலத்தில் குடியுருப்புகள் போக ஒட்டுமொத்தப் பேரின் பொதுப்பயன்பாட்டுக்காக பூங்கா மற்றும் கடைகள் அமைக்க குறிப்பிட்ட அளவு நிலம் ஒதுக்கப்பட்டிருந்ததாம்.

அந்தப் பொது இடத்தில் படப்பிடிப்பு நடத்த ஏதுவான அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறதாம். அந்த அரங்கத்தில்தான் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.

பொதுப்பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் படப்பிடிப்பு அரங்கம் அமைத்து அதை தன்னிஷ்டத்துக்கு வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் ஆர்.கே.செல்வமணி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

குடியிருப்புகள் கட்டுவதில் கவனம் செலுத்தாமல் மூன்றாண்டுகளில் அரசாணையை காலாவதியாகச் செய்து மீண்டும் அரசிடம் முறையிட்டு உரிமை பெற்றிருக்கிறார்கள்.நல்லவேளையாக திமுக அரசே இருந்ததால் அரசாணை புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.இல்லையெனில் அந்த இடம்கைவிட்டுப் போயிருக்கும்.இந்தவிசயத்தில அலட்சியமாக இருந்தவர் படப்பிடிப்பு அரங்கம் அமைத்து பணம்பார்த்துக் கொண்டிருக்கிறார் என அக்குற்றச்சாட்டு நீள்கிறது.

மெதுவாகத் தொடங்கிய அந்த சர்ச்சை வெளியில் தெரியாமல் வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறதாம்.

விரைவில் அது வெடித்துச் சிதறுமென்றும் அது ஆர்.கே.செல்வமணிக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்துமென்றும் சொல்லப்படுகிறது.

திரையுலகில் கமுக்கமாகப் பேசப்படும் இச்சிக்கலில் அடுத்து என்ன நடக்கப்போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

– துப்பறிவாளன்

Related Posts