சூர்யா இப்படிச் செய்யலாமா? – குமுறும் திரைத்துறை
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.ஃபிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.
இந்தப் படத்தில் இயக்குநர்களும், நடிகர்களுமான பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் ‘வா செல்லம்’,’கலைகிறதே கனவே’ ஆகிய பாடல்கள் வெளீயாகியிருக்கின்றன.
இப்படம் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்று எண்ணிய நிலையில் கொரோனா காரணமாக வெளியீட்டுத் தேதி தள்ளிப்போயிருக்கிறது.
இந்நிலையில், திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்பே நேரடியாக இணையதளத்தில் வெளீயிட முடிவு செய்துவிட்டார்களாம்.
அமேசான் நிறுவனத்துக்கு அதற்கான உரிமை வழங்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான விலை ஒன்பது கோடி என்கிறார்கள்.
வெளியாகாத ஒரு படத்துக்கு இவ்வளவு விலை கிடைத்திருக்கிறது என்பது பெரும் வியப்பு என்பதோடு, இந்த விலை என்றால் பாதிக்குப் பாதி இலாபம் கிடைத்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அதாவது இந்தப்படத்தின் மொத்தச் செலவு சுமார் நான்கரை கோடி என்றும் அதே அளவு இலாபம் கிடைத்திருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது.
இது தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு இலாபம் என்றாலும் எதிர்காலம் குறித்த அச்சத்தின் பிடியில் இருக்கும் திரைத்துறையை மேலும் நசுக்கும் செயல் என்கிற விமர்சனங்களும் வருகின்றன.
திரையுலகம் என்பது படைப்பாளிகளைத் தாண்டி திரைப்படத் தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் திரையரங்கினர் ஆகிய மூன்று பெரும் குழுவினர் வாழும் ஒரு துறை.
நேரடியாக இணையதளத்தில் படத்தை வெளியிட்டால் தயாரிப்பாளருக்கு இலாபம் கிடைக்கலாம் அதற்கடுத்து பன்னாட்டு நிறுவனம் பலன் பெறும். இதுகாலம் வரை திரைப்படத் தொழிலையே நம்பியிருந்த விநியோகஸ்தர்கள் திரையரங்குக்காரர்கள் முற்றாக அழிந்து போவார்கள்.
என்னதான் தொழில்நுட்ப உலகம் என்றாலும் பெரியதிரையில் படம் பார்க்கிற அனுபவம் எல்லோருக்கும் கிடைக்குமா? வீட்டில் பெரிய தொலைக்காட்சி துல்லியமான ஒலியமைப்பு கொண்டவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்? கணினித் திரைகளிலும் கைபேசிகளிலும் காட்சியழகு மற்றும் ஒளி ஒலி அழகுகள் முழுமையாக வெளிப்படுமா?
இவ்வாறு திரைக்கலையின் பெருமை குறைவதோடு, ஒவ்வொரு திரையரங்கையும் நம்பி ஏராளமான குடும்பங்கள் இருக்கின்றன. அவை அழிய வேண்டியதுதானா?
இதைத்தான் சூர்யா விரும்புகிறாரா? திரைப்படத்துறையால் புகழ்பெற்ற சூர்யா குடும்பமே திரைப்படத்துறையை நம்பி இருக்கும் பல்லாயிரம் பேரின் அழிவுக்குக் காரணமாக இருக்கலாமா? என்கிற ஆதங்கங்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.
பின்குறிப்பு – சூர்யா தன் படத்தைக் கொடுத்துவிட்டால் எல்லோரும் கொடுத்துவிடுவார்களா? அல்லது எல்லாப் படங்களையும் அவர்கள் வாங்கிக் கொள்வார்களா? என்று கேட்பவர்களுக்கு மட்டும்..
பொன்மகள்வந்தாள் படம் நேரடியாகக் கொடுக்கப்பட்டது தெரிந்தவுடன் யோகிபாபு நடித்த,இன்னும் திரைக்கு வராத காக்டெயில் திரைப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் இணைய ஒளிபரப்பு உரிமையை ஒரு தனியார் தொலைக்காட்சி பெற்றிருக்கிறது. இன்னும் ஏராளமானோர் இலாபம் இல்லையென்றாலும் பரவாயில்லை போட்ட பணம் வந்தால் போதுமென படத்தைக் கொடுக்கத் தயாராகிவிட்டனர்.











