தடுமாறிய விஷால் படம் தாங்கிப் பிடித்த தனுஷ் மேனேஜர்
விஷால் நடிக்கவிருக்கும் புதிய படமொன்றைத் தயாரிக்க தயாரிப்பாளர் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள். அடிக்கடி மாறும் அப்படத்தின் தற்போதைய நிலை இதுதானாம்….
விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி,விக்ரம் நடித்த இருமுகன்,விஜய்தேவரகொண்டா நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர்.
இவர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொன்னார்கள். அந்தப்படத்தை கே.பி.ஃபிலிம்ஸ் பாலு தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.
வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெறும் என்று சொல்லப்பட்ட அந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவிருக்கிறது என்றும் சொன்னார்கள்.
ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகம் ஆகும் என்பதால் இப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பிலிருந்து கே.பி.ஃபிலிம்ஸ் பாலு விலகிக் கொண்டாராம்.
அதன்பின் தனுஷிடம் மேலாளராகப் பணியாற்றிய வினோத், இப்படத்தைத் தயாரிக்க முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தினாராம். அவரும் படத்தின் பட்ஜெட்டைக் காரணம் சொல்லி விலகிக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது.
இதனால் திகைத்து நின்ற இயக்குநர் ஆனந்த் ஷங்கருக்கு விஷாலே கை கொடுத்திருக்கிறாராம்.
இந்தக்கதை மிகவும் நன்றாக இருக்கிறது, இதை விட்டுவிட மனமில்லை, எனவே எங்கள் நிறுவனத்திலேயே இந்தப்படத்தைத் தயாரிக்கிறேன் கொஞ்சம் பொறுத்திருங்கள் என்று சொல்லியிருக்கிறார் என்றார்கள்.
இதற்கிடையே இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கவிருக்கிறார் என்றும் விஷாலுக்குப் பதிலாக சிம்பு கதாநாயகனாக நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது.
தற்போது அதிலும் மாற்றம் நடந்திருக்கிறதாம்.
பட்ஜெட் அதிகம் என்று சொல்லி நிராகரித்த தனுஷ் மேனேஜர் வினோத்தே இந்தப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறாராம். பட்ஜெட் மற்றும் சம்பள விசயங்களில் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இறங்கிவந்ததால் இந்த மாற்றம் என்று சொல்லப்படுகிறது.











