விஜய் 65 பட சம்பளத்தைப் பாதியாகக் குறைத்த நிறுவனம் சரியென்று தலையாட்டிய முருகதாஸ்
விஜய் நடித்த மாஸ்டர் விரைவில் வெளியாகவிருக்கிறது. மாஸ்டர் விஜய்யின் 64 ஆவது படம்.
இதற்கடுத்து விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் உறுதியானது.
அப்படம் துப்பாக்கி 2 ஆக இருக்கும் என்று சொல்லப்பட்டது. அதை உறுதி செய்யும் வண்ணம் அப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதோடு படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான ஒப்பந்தங்கள் மார்ச் 21 ஆம் தேதியன்று போடப்பட்டன என்கிறார்கள்.
இந்தப்படத்துக்காக ஏ.ஆர்.முருகதாஸ் பெறுகிற சம்பளம் குறித்து வெளியாகும் தகவல்கள் ஆச்சரியமூட்டுகின்றன.
இதற்கு முன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தர்பார் படத்துக்காக அவர் வாங்கிய சம்பளம் 35 கோடி என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விஜய் 65 படத்துக்கான சம்பளம் பற்றிப் பேச்சு வந்தபோது, தர்பாருக்கு வாங்கிய அதேசம்பளம் அல்லது கொஞ்சம் குறைவாக வேண்டுமானாலும் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னாராம். ஏ.ஆர்.முருகதாஸ். அவர் இப்படிச் சொன்னதும் சன் பிக்சர்ஸ் தரப்பிலிருந்து பதிலே இல்லையாம். ஒருவாரம் பத்துநாள் ஆகியும் பதில் வராததால் பயந்து போன ஏ.ஆர்.முருகதாஸ், மீண்டும் சன் பிக்சர்ஸை தொடர்பு கொண்டாராம்.
அப்போது, சம்பளம் எவ்வளவு என்று நீங்களே சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார் முருகதாஸ். அதற்கு உங்கள் சம்பளம் 18 கோடி விருப்பமிருந்தால் வேலை செய்யுங்கள் என்று பதில் வந்ததாம்.
முந்தைய படத்துக்கு வாங்கிய சம்பளத்தில் சரிபாதிதான் என்றாலும் மறுபேச்சுப் பேசாமல் ஒப்புக்கொண்டாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.
இதனால் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டன என்கிறார்கள்.











