கார்த்தி நடிக்கும் புதியபடங்கள் தொடக்கம் – விவரங்கள்
கார்த்தி நடித்துள்ள பொன்னியின்செல்வன் 2 படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
அதைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ஜப்பான் படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் அந்தப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.
இதற்கடுத்து பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் கார்த்தி.
இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில் அதாவது மார்ச் 27 அன்று கார்த்தி நடிக்கவிருக்கும் இரண்டு புதியபடங்களுக்கான அலுவலக பூசை எளிய முறையில் நடந்தேறியுள்ளது.
இவற்றில் ஒரு படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம் தயாரிக்கிறது.அந்தப்படத்தை இயக்குநர் நலன்குமாரசாமி இயக்கவிருக்கிறார்.
இன்னொரு படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இந்தப்படத்தை 96 படத்தை இயக்கிய பிரேம் இயக்கவுள்ளார்.
இவ்விரு படங்களுக்குமான அலுவலக பூசை ஒரேநாளில் நடந்திருக்கிறது. ஆனால் அவை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதையும் அவர்கள் வெளியிடவில்லை.
அதற்குக் காரணம் இருக்கிறதாம்.
இவற்றில் பிரின்ஸ் பிக்சர்ஸ் படத்திற்கான கதை தொடர்பாக இறுதிமுடிவு எட்டப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதேபோல நலன்குமாரசாமி படத்தையும் சோதனை படப்பிடிப்பு நடத்தி நன்றாக வந்தால் தொடரலாம் என்று நினைத்திருக்கிறார்களாம்.
அதனால் அவை குறித்த அறிவிப்புகளை வெளியிடவில்லை என்கிறார்கள்.
அதேநேரம், பிரேம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.










