சினிமா செய்திகள்

கேப்டன் மில்லர் அயலான் – தெலுங்குக்காகச் சின்ன மாற்றம்

பொங்கல் திருநாளையொட்டி சனவரி 12 ஆம் தேதி, தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.இவற்றில் கேப்டன்மில்லர் படத்துக்கு யுஏ சான்றிதழும் அயலான் படத்துக்கு யு சான்றிதழும் கொடுக்கப்பட்டன.

இவ்விரு படங்களையும் தெலுங்கிலும் மொழிமாற்றி வெளியிடத் திட்டமிட்டனர்.கேப்டன் மில்லர் படம் சனவரி 26 அன்று வெளியாகும் என்று முன்பே சொல்லிவிட்டார்கள். அயலான் படம் சனவரி 12 அன்றே தெலுங்கிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் தெலுங்கில் வெளியாகும் நேரடித் திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரவேண்டும் என தெலுங்குத் திரைப்படத்துறையினர் அழுத்தம் கொடுத்த காரணத்தால் அயலான் படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சனவரி 12 அன்று வெளியாகவில்லை.

இப்போது அவ்விரு படங்களும் சனவரி 26 அன்று தெலுங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழில் வெளியான இப்படங்கள் தெலுங்கில் வெளியாகும்போது சின்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கேப்டன் மில்லர் திரைப்படம் 157.50 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருந்தது. அதாவது இரண்டுமணிநேரம் முப்பத்தேழு நிமிடங்கள். தமிழில் கிடைத்த விமர்சனங்களையொட்டி இப்போது சுமார் ஒன்பதுநிமிடங்கள் குறைக்கப்பட்டு 149 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் வெளியிடப்படவிருக்கிறது.

அதேபோல அயலான் படத்திலும் நடந்திருக்கிறது. தமிழில் அயலான் 155.50 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருந்தது.

இப்போது தெலுங்கில் சுமார் ஆறுநிமிடங்கள் குறைத்து 150 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் வெளியிடப்படவிருக்கிறது.

இதனால், இப்படங்களுக்குத் தமிழில் கிடைத்த வரவேற்பைக் காட்டிலும் தெலுங்கில் கூடுதல் வரவேற்புக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த மாற்றங்கள் உணர்த்தும் செய்தி என்னவென்றால்?

எவ்வளவு பெரிய கதாநாயகன் என்றாலும் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்படுகிற படங்கள் என்றாலும் கொஞ்சம் நீளம் அதிகம் என்றால் இரசிகர்களின் அதிருப்தியைச் சந்திக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Related Posts