லப்பர் பந்து வெற்றிக்குப் பின் தினேஷ் கேட்கும் சம்பளம் – அதிரும் திரையுலகம்

சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த தினேஷ், 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.பா.இரஞ்சித்தின் முதல்படமான அது வெற்றி பெற்றதால் அதன் நாயகன் தினேஷ், அட்டகத்தி தினேஷ் என்று அழைக்கப்பட்டார்.
அப்படத்துக்குப் பின் அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்தன என்றும் ஆனால் படங்களைத் தேர்வு செய்வதில் அவர் காட்டிய சுணக்கத்தால் நிறையப் படங்கள் அவர் கையை விட்டுப் போய்விட்டன என்றும் சொல்வார்கள்.
அவர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி 13 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும் இன்னமும் தனிக் கதாநாயகனாக அவர் வெற்றி பெறவில்லை என்று திரைப்பட வியாபார வட்டாரத்தினர் சொல்கிறார்கள்.
பெயர் பெற்ற இயக்குநர்கள் இயக்கும் படங்கள் மற்றும் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடிப்பதென்றுதான் இருக்கிறார்.
அவர் நடிப்பில் கடைசியாக வெளியான லப்பர் பந்து படத்திலும் இரண்டு நாயகர்களில் ஒருவராகத்தான் நடித்திருந்தார்.
அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதுடன் அப்படத்தில் தினேஷ் சிறப்பாக நடித்திருந்தார் என்றும் பெயர் பெற்றார்.அதோடு இதுவரை அட்டகத்தி தினேஷ் என்றால்தான் தெரியும் என்றிருந்ததில் மாற்றம் ஏற்பட்டு லப்பர் பந்து படத்தில் அவர் ஏற்றிருந்த வேடத்தையொட்டி கெத்து தினேஷ் என்று சொல்லத் தொடங்கியிருக்கின்றனர்.
அட்டகத்தி படம் வெளியான பின்பு அவருக்குக் கிடைத்த வரவேற்பு போல் இப்போது லப்பர் பந்து பட வெளியீட்டுக்குப் பின் பெரும் வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.
அதன் விளைவு அவரை நடிக்க வைக்க எண்ணி அவரிடம் கதை சொல்ல நிறையப் பேர் முயன்று வருகின்றனர்.பத்துக்கும் மேற்பட்டோர் அவரை அணுகியதாகவும் போன அவ்வளவு பேரும் சுவற்றில் அடித்த பந்து போல் திரும்பி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஏன்? என்னாச்சு?
கதை சொல்லப் போனவர்களிடம் கதையெல்லாம் அப்புறம் கேட்டுக் கொள்கிறேன் என் சம்பளம் நான்கரை கோடி.அதைத் தர முடியுமானால் சொல்லுங்கள் கதை கேட்கிறேன் என்று சொன்னாராம்.அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்துதான் அனைவரும் திரும்பிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.
லப்பர் பந்து படத்தில் சுமார் நாற்பது இலட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தவர் அந்தப்படம் ஓடியதும் அப்படியே பத்துமடங்கு அதிகம் கேட்கிறாரே என்று எல்லோரும் வியக்கிறார்கள்.
யாரும் கேட்ட சம்பளத்தைத் தரவில்லையென்றதும்,இப்போதைக்கு புதியபடம் எதுவும் ஒப்புக் கொள்வதாக இல்லை அதனால் என்னிடம் கதை சொல்ல யாரும் வரவேண்டாம். தண்டகாரண்யம் படம் வெளிவரும்வரை கதை கேட்கமாட்டேன்.அப்படமும் பெரிய வெற்றி பெறும் அப்போது இன்னும் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொண்டு கதை கேட்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.
இந்தச் செய்தியை அறிந்தவர்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.