இந்தியைத் திணிப்பதா? – ஏ.ஆர்.முருகதாஸுக்குக் குவியும் கண்டனங்கள்
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சிக்காரர். தன்னை தமிழன் என்று பெருமைபடச் சொல்லிக் கொள்பவர்.
மறைக்கப்பட்ட ஒரு தமிழனின் வரலாற்றை உலகறியச் செய்யவே ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மன் கதையை வைத்ததாகச் சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டவர்.
அவர் தன்னுடைய படங்களுக்கு தொடர்ந்து பிறமொழிச் சொற்களையே பெயராக வைப்பதற்குக் கண்டனங்கள் குவிகின்றன.
இன்று ரஜினியை வைத்து அவர் இயக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. படத்தின் பெயர் தர்பார்.
இப்பெயர் வெளியானதும் முருகதாஸுக்கு எதிரான கண்டனங்கள் வரத்தொடங்கிவிட்டன.
இதற்கு முந்தைய அவர் விஜய்யை வைத்து இயக்கிய படத்தின் பெயர் சர்கார்..
இப்போது ரஜினி படத்துக்கு தர்பார் என்று வைத்துள்ளார்.
முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பிறமொழிச் சொற்களைப் பெயராக வைப்பதால் அவை எளிதாக மக்களிடம் சேரும். அதன்மூலம் ஒரு தமிழ்ச்சொல் மறைகிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
இதுபற்றி திரைத்துறையினர் கூறும்போது, அவர் எப்போதுமே அப்படித்தான். தமிழ்ப்பெயர்களுக்கு வரிவிலக்கு என்று இருந்ததால் கத்தி, துப்பாக்கி என்று பெயர் வைத்தார். அதி இல்லையென்றதும் ஸ்பைடர், சர்கார், தர்பார் என்று பிறமொழிச் சொற்களை வைக்கிறார் என்கிறார்கள்.
ஸ்பைடர், சர்கார், த்ர்பார் என்று வெவ்வேறு மொழிச் சொற்களை வைத்தாலும், வெகுமக்களைப் பொறுத்தவரை சர்கார் தர்பார் ஆகிய சொற்களை இந்தி என நினைத்து ஏ.ஆர்.முருகதாஸ், தமிழகத்தில் இந்தியைத் திணிக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ், தர்பார் என்கிற பெயரை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.











