ஏஆர்எம் 3டி படக்குழு மகிழ்ச்சி – காரணம் தி கோட்
மலையாள நடிகர் டோவினோ தாமஸ், தமிழில் தனுஷின் ‘மாரி 2’ படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த மலையாளப்படமான‘மின்னல் முரளி’ தமிழிலும் வெளியானது.
இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார்.
‘ஏஆர்எம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அப்படத்தை அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்கியுள்ளார்.
இதில் டோவினா தாமஸ், மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றுகிறார். அவரின் 50 ஆவது படமான இதில், கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். பசில் ஜோசப், ஜெகதீஷ், ஹரிஷ் உத்தமன், ஹரிஷ் பெரேடி, பிரமோத் ஷெட்டி, ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர்.
திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார்.மலையாளம், தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என 6 மொழிகளில் செப்டம்பர் 12 ஆம் தேதி இந்தப் படம், வெளியாகிறது.
மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் மூலம் லிஸ்டின் ஸ்டீபன்,டாக்டர்.ஜகாரியா தாமஸுடன் இணைந்து தயாரித்துள்ளார். ஃபேன்டசி வகைப் படமான இது 3-டியில் உருவாகியுள்ளது.
இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ஃபைவ் ஸ்டார் செந்தில் பெற்றுள்ளார்.
கோவை, சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய விநியோகப் பகுதிகளில் அவரே இந்தப்படத்தை விநியோகிக்கிறார்.
மீதமுள்ள சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் மதுரை ஆகிய விநியோகப் பகுதிகளில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது.
பெரும் தொகை போட்டு இப்படத்தைத தயாரித்த மலையாள நிறுவனங்களும் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமைக்காக பெரும் தொகை கொடுத்திருந்த ஃபைவ் ஸ்டார் செந்திலும் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
காரணம், நேற்று முன்தினம் வெளியான விஜய்யின் தி கோட் படம் சரியாகப் போகவில்லை. எனவே, இந்தப் படத்துக்கு நல்ல திரையரங்குகள் கிடைக்கும் என்பதோடு செப்டம்பர் இருபதாம் தேதி அடுத்த படங்கள் வருகிற வரை இந்தப்படம் நல்ல வசூலையும் பெறும் என்பதால் அந்த நிம்மதி.
தமிழ்நாட்டிலேயே இப்படி என்றால் கேரளாவில் கேட்கவே வேண்டாம். ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நான்கு படங்கள் வெளியாகவிருக்கின்றன.
தி கோட் ஓடவில்லை என்பதால் இந்த வாரம் எல்லாத் திரையரங்குகளிலிருந்தும் அப்படம் எடுக்கப்பட்டுவிடும். அதனால் அந்நான்கு படக்குழுவினரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனராம்.











