சினிமா செய்திகள்

தி கோட் முதல்நாள் வசூல் இவ்வளவு குறைவா? – படக்குழு அதிர்ச்சி

வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் தி கோட் என்று சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்.

இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன்,ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் நேற்று (செப்டம்பர் 5) வெளியானது.

இப்படம் தம்ழ்நாட்டில் மட்டும் சுமார் எண்ணூறு முதல் தொள்ளாயிரம் திரையரங்குகளில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் இராகுல் பெற்றிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் முதல்நாள் உத்தேச வசூல்
நிலவரம் வெளிவந்துள்ளது.

அதன்படி முதல்நாள் வசூல் சுமார் இருபத்து ஏழு கோடி என்று சொல்லப்படுகிறது.

இது விஜய்யின் முந்தைய பட வசூல்களை விடக் குறைவு என்று சொல்கிறார்கள்.

இதுகுறித்து திரைப்பட வட்டாரத்தினர் கூறியதாவது….

இந்த வசூல் விஜய்யின் முந்தைய படங்களை விட மிகவும் குறைவு.

இப்படத்துக்கு முன்பு வெளியான லியோ படம் முதல்நாளில் சுமார் முப்பத்து நான்கு கோடி வசூலித்தது.

விஜய்யின் தோல்விப்படங்கள் என்று சொல்லப்பட்ட பீஸ்ட மற்றும் சர்கார் ஆகிய படங்களின் முதல்நாள் வசூல் தி கோட் படத்தை விட அதிகம்.

பீஸ்ட் படம் முதல்நாளில் சுமார் முப்பத்து இரண்டு கோடி வசூல் செய்தது. சர்கார் படத்தின் முதல்நாள் வசூல் சுமார் இருபத்து ஒன்பது கோடி.

அவ்விரு படங்களை விட இப்படத்தின் வசூல் குறைந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி படம் சரியாக இல்லை என்றும் விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த ராஜதுரை என்கிற படத்தின் காப்பி என்றும் வருகிற விமர்சனங்களால் வசூல் நிறைவாக இருக்காது என்றும் திரையரங்கினர் சொல்லி வருகிறார்கள்.

இந்தக் கருத்து சரியா? என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்

இவ்வாறு கூறுகின்றனர்.

இந்தத் தகவல்களால் படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோக நிறுவனம் ஆகியன மட்டுமின்றி நடிகர் விஜய் தரப்பும் கடும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts