சினிமா செய்திகள்

சூர்யா கார்த்தி ஹாரிஸ்ஜெயராஜ் பாடகர் எஸ்.பி.பி கவிஞர் கபிலன் – ஓர் ஆச்சரிய ஒற்றுமை

புதுமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘தேவ்’. இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார்.

இவர்களுடன்,ரம்யாகிருஷ்ணன்,பிரகாஷ்ராஜ் ‘ஸ்மைல் சேட்டை’ ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், அம்ருதா, வம்சி ஆகியோரும் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் கார்த்திக், நிக்கி கல்ராணி இருவரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்‌ஷ்மண் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்துக்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் பிரபல பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

பாடலாசிரியர் கபிலன் எழுதிய அந்தப்பாடல் பதிவு அண்மையில் நடந்தது.

பாடல்பதிவின்போது பாடலாசிரியர் கபிலன், நாயகன் கார்த்தி, இயக்குநர் ரஜத்ரவிசங்கர் ஆகியோரும் உடனிருந்தனர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கார்த்தியைப் பார்த்து மிக மகிழ்ச்சியாக, உங்கள் அப்பாவுக்கும் நான் பாடியிருக்கிறேன். அண்ணனுக்கும் பாடியிருக்கிறேன் இப்போது உங்களுக்கும் பாடுகிறேன் என்று கூறினாராம்.

ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்காக யம்மா யம்மா காதல் பொன்னம்மா பாடலைப் பாடினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இப்போது அவருடைய தம்பி கார்த்திக்காகப் பாடியுள்ளார்.

இவ்விரு பாடல்களுக்கும் இசை ஹாரிஸ்ஜெயராஜ், இவ்விரு பாடல்களையும் பாடலாசிரியர் கபிலன் எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியமான ஒற்றுமை.

Related Posts