அரசன் படப்பிடிப்பு எப்போது? – புதிய தகவல்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ந்டிக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 8,2025 அன்று கோயில்பட்டியில் தொடங்கியது.
அரசன் படம், வடசென்னையை மையப்படுத்திய கதைக்களம் கொண்டது என்று வெற்றிமாறனே சொல்லியிருந்தார்.அதனால் வடசென்னை பகுதியைப் பிரதியெடுத்து பிரமாண்ட அரங்கம் அமைக்கப்படுகிறது.அங்குதான் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று முதலில் சொன்னார்கள்.
வடசென்னைப் பகுதியில் பெரியஆளாக வலம்வருகிற அரசன்,மதுரைப் பகுதியிலிருந்து சென்னைக்கு வந்தவர் என்பது போல ஒரு முன்கதை வைத்திருக்கிறாராம் வெற்றிமாறன்.
அதனால்,அங்கிருந்தே படப்பிடிப்பைத் தொடங்கிவிடலாம் என்று திட்டமிட்டு அதன்படி தொடங்கினார்கள்.
முதல்கட்டப் படப்பிடிப்பு சுமார் பதினெட்டு நாட்கள் நடத்தியிருக்கிறார்கள்.இதில் அங்கு எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டன என்று தகவல் வெளியானது.
அதன்பின்,அடுத்தகட்டப் படப்பிடிப்பு சனவரி 8 ஆம் தேதி தொடங்குவதாகச் சொல்லப்பட்டது.வடசென்னைப் பகுதியிலேயே படப்பிடிப்பு நடக்கும் என்றும் சொன்னார்கள்.
ஆனால், சொன்னபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை.
ஏனெனில்?
படப்பிடிப்பு தொடங்கியதும் பொங்கல் விழாக் கொண்டாட்ட மனநிலை வந்துவிடும் என்பதால் பொங்கல் முடிந்து படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டதாகச் சொல்லப்பட்டது.
இப்போது, சனவரி 26 முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்தப் படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என்று எதிர்பார்த்தால்? இல்லை மீண்டும் மதுரைப் பகுதிகளில்தான் நடக்கவிருக்கிறது என்கிறார்கள்.
ஏனெனில்?
முதல்கட்டப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளைத் தொகுத்துப் பார்த்தபோது, எடுத்ததில் சில மாற்றங்கள் மற்றும் மேலும் சிலவற்றைச் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று வெற்றிமாறன் நினைத்திருக்கிறார்.அதனால் மீண்டும் அங்கேயே படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறாராம்.
தயாரிப்பாளர் தாணுவுக்கும் இயக்குநரைப் பற்றி நன்கு தெரியும் என்பதால்,அவர் என்ன நினைக்கிறாரோ அப்படியே செய்யட்டும் இது அவருடைய படம் என்று முழுமையான சுதந்திரம் கொடுத்துவிட்டாராம்.
இதனால் மீண்டும் அங்கேயே படப்பிடிப்பு தொடரவிருக்கிறது.எவ்வளவு நாட்கள்? என்பது வெற்றிமாறனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் என்கிறார்கள்.
இந்நிலையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியாக வேண்டிய நெருக்கடியில் இருக்கும் சிம்பு, அரசன் படம் ஒரு பக்கம் நடக்கட்டும். இங்கு என்ன நடந்தாலும் சரி, ஏப்ரல் மாதத்தில் ஏஜிஎஸ் படத்துக்கு வந்துவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.
என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.











