சூர்யா 48 படத்தில் இயக்குநர் மாற்றம் – புதிய தகவல்
சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
கருப்பு படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. தற்காலிகமாக சூர்யா 46 எனக் கூறப்படும் இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.
நாக வம்சி தயாரித்து வரும் இந்தப் படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
நீண்ட நாட்களுக்குப் பின் மனித உணர்வுகளைக் கொண்ட ஒரு மகிழ்ச்சியான குடும்பப் படமாக இது இருக்கும்.கஜினி படத்தில் வந்த சஞ்சய் ராமசாமி போன்றதொரு கதாபாத்திரத்தில் சூர்யா சாரை காண்பீர்கள் என்று தெரிவித்துள்ளார் வெங்கி அட்லுரி.இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி வெளியாகும் என கூறப்படுகிறது.
இவ்விரு படங்களுக்கு அடுத்து சூர்யா, இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகிறது ஒரு புதியபடம். ‘சூர்யா 47’ என்றழைக்கப்படும் அப்படத்தின் படப்பிடிப்பு 2025 டிசம்பர் 7 அன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, நஸ்ரியா நசீம் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்திய வெற்றிகள் மூலம் கவனம் ஈர்த்த இளம் நடிகர் நஸ்லென் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஜான் விஜய், ஆனந்த் ராஜ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு இசை சுஷின் ஷியாம், ஒளிப்பதிவு வினீத் உண்ணி பாலோட்,படத்தொகுப்பு அஜ்மல் சாபு,கலை இயக்கம் அஸ்வினி காலே, சண்டைப்பயிற்சி சேத்தன் டி சௌசா.
இப்படத்தை சூர்யாவின் சொந்த நிறுவனமான ழகரம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜோதிகா தயாரிக்கிறார்.
இந்த ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம், அடுத்தடுத்து தயாரிக்கும் இரண்டு படங்களில் சூர்யா நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.அவற்றில் ஒன்று ஜீத்துமாதவன் இயக்கும் படம். இன்னொரு படத்தை பா.இரஞ்சித் இயக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.
இப்போது அதில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறதாம்.
சூர்யா 47 படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை பாண்டிராஜ் இயக்கவிருக்கிறாராம். அவர் இப்போது ஜெயராம் ஊர்வசி உள்ளிட்டோர் நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.அப்படத்தை முடித்துவிட்டு அவர் வரவும் சூர்யா 47 படத்தை முடித்துவிட்டு சூர்யா வரவும் சரியாக இருக்குமென்கிறார்கள்.











