February 12, 2025
சினிமா செய்திகள்

விட்டுக்கொடுத்தார் விஜய் ஆண்டனி – பராசக்தி சிக்கல் தீர்ந்தது

நேற்று தை அமாவாசை நாள்.அதனால் பல படங்களின் அறிவிப்பு பெயர் அறிவிப்பு ஆகியன வெளியிடப்பட்டன.

அந்த வகையில்,சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்துக்கு ‘பராசக்தி’ என்ற பெயர் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.

இப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25 ஆவது படம். அத்துடன் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 100 ஆவது படமாகும்.

இதன் பெயர் அற்விப்பு ஓர் அறிமுக காணொலியுடன் மாலை நான்கு மணிக்கு வெளியானது.

அதற்கு முன்பாக, நேற்று காலை 11 மணியளவில் தனது புதிய படத்தின்முதல்பார்வையை வெளியிட்டார் விஜய் ஆண்டனி. தமிழில் ‘சக்தி திருமகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அப்படத்துக்கு தெலுங்கில் ‘பராசக்தி’ என்று வைத்திருந்தனர்.

இதனால் திரையுலகில் பரபரப்பு நிலவியது.

ஏனெனில் இப்போது பெரும்பாலான படங்கள் தமிழ் மட்டுமின்றி பிறமொழிகளிலும் வெளியிடும் வண்ணமே தயாரிக்கப்படுகின்றன.

அதிலும் இந்த பராசக்தி படத்தை தெலுங்கிலும் பெரிய அள்வில் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே அங்கு புகழ்பெற்றிருக்கும் ஸ்ரீலீலாவை நாயகியாக்கியிருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது இந்தப் பெயரில் விஜய் ஆண்டனி படமும் அறிவிக்கப்பட்டதே பரபரப்புக்குக் காரணம்.

இந்தப் பெயர் யாருக்குச் சொந்தம்? என்கிற பேச்சு தொடங்கியதும், தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘பராசக்தி’ என்ற பெயரை,தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் பயன்படுத்த தென்னிந்திய ஃபிலிம் சேம்பரில் பதிவு செய்த ஆதாரத்தை விஜய் ஆண்டனி பகிர்ந்திருந்தார். அதை எந்தத் தேதியில் பதிவு செய்திருந்தோம் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார்.

டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் ’பராசக்தி’ பெயரை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்த ஆதாரத்தை பகிர்ந்திருந்தது.

பராசக்தி பெயரின் உரிமையாளரான ஏவிஎம் நிறுவனம், சிவகார்த்திகேயனின் ’பராசக்தி’ படத்துக்கு வாழ்த்து தெரிவித்தது.அதன்மூலம் நாங்கள் இந்தப் பெயரைக் கொடுத்தது டான் பிக்சர்ஸுக்கு தான் என்கிற தகவலைச் சொல்லியது.

இருதரப்பும் இப்படி மோதிக் கொள்வதால் இந்தச் சிக்கல் பெரிதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்றே அச்சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது.

என்ன தீர்வு?

டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன், விஜய் ஆண்டனையைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.அப்போது பராசக்தி படத்தை எவ்வளவு பெரிதாகத் திட்டமிட்டுப் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை விளக்கிச் சொன்னதாகத் தெரிகிறது.

இதனால்,வ்ஜய் ஆண்டனி அந்தப் பெயரை விட்டுக் கொடுத்துவிட்டாராம்.

தமிழில் வைத்த அந்தப் பெயரையே தெலுங்கிலும் வைத்துக் கொள்வது அல்லது அங்கு ஆதிபராசக்தி என்று வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.

இதனால் பெரிதாக வளரும் என நினைத்த சிக்கலுக்கு 24 மணி நேரத்துக்குள் தீர்வு காணப்பட்டுவிட்டது.

அதேநேரம்,தற்போது பெரும்பாலான படங்கள் பான் இந்தியா படம் என்று சொல்லப்பட்டு எல்லா மொழிகளிலும் வெளியிடத் திட்டமிடப்படுகின்றன.

எனவே, இனிவரும் காலங்களில் திரைப்படத் தலைப்புகள் பதிவு செய்யும் முறையை எப்படி மாற்றியமைப்பது? என்கிற விவாதமும் தொடங்கியுள்ளது என்கிறார்கள்.

Related Posts