December 11, 2025
விமர்சனம்

ரிங் ரிங் – திரைப்பட விமர்சனம்

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

என்றார் திருவள்ளுவர்.அதன் பொருள், குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால், உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம் என்பதுதான்.

வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயங்கள் என்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

இவ்விரண்டு கருத்துகளையும் கணவன் மனைவி உறவுக்குள் பொருத்தி கலகலப்பாகக் கதை சொல்லியிருக்கும் படம்தான் ரிங்ரிங்.

விவேக் பிரசன்னா -ஸ்வயம் சித்தா,
டேனியல் அன்னி போப் – ஜமுனா,
பிரவீன் ராஜா – சாக்ஷிஅகர்வால்,
அர்ஜுனன் – சஹானா

ஆகிய நான்கு இணைகள் கதாபாத்திரங்களாக வருகின்றனர்.

கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு வந்த போனை ஸ்பீக்கர் போட்டு அடுத்தவர் கேட்க வேண்டும் என்கிற விளையாட்டை நான்கு இணையரும் விளையாடுகிறார்கள்.

அந்த விளையாட்டு வினையாகிறது.என்ன வினை? அதன் விளைவென்ன? என்பதுதான் திரைக்கதை.

நான்கு இணையர்களில் விவேக் பிரசன்னா – ஸ்வயம் இணை நடிப்பில் முதலிடம் பெறுகிறது.சில இடங்களில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர்.

இன்னொரு பெண்ணுடனான தொடர்பு தெரிந்து காதலியிடம்  மாட்டிக் கொள்ளும் போது போதையில் செஞ்சிட்டேன் என்று விழி பிதுங்கி சமாளித்து உளறும் டேனியல் நடிப்பும் கலகல ரகம்.பிரவீன் ராஜா – சாக்ஷி அகர்வாலுக்குள் நடக்கும் உரையாடலும், அவர்களுக்குள் விழும் சந்தேக முடிச்சு அவிழ்வதும் நல்லதொரு உணர்வு வெளிப்பாடுகள்.அர்ஜுனன் – சஹானா இருவருக்குள் நிலவும் புரிதலின்மையின் வெளிப்பாடுகளை நன்றாகவே நடிப்பில் காட்டியுள்ளனர்.குறிப்பாக அர்ஜுனன் அதிகம் பேசாமலே விழிகளாலே உணர்வுகளைக் கடத்தி உள்ளார்.

ஒளிப்பதிவாளர் பிரசாந்த் உழைப்பில் கதாபாத்திரங்களைச் சுற்றியே காட்சிகள் இருந்தாலும் அவற்றில் கூடுமானவரை சுவாரசியம் சேர்ந்திருக்கிறது.

வசந்த் இசைப்பேட்டை இசையில் பாடல்கள் கேட்கலாம்,திரைக்கதைக்குப் பலம் சேர்க்கும் வகையில் பின்னணி இசை அமைந்திருக்கிறது.

வசனங்களால் நிறைந்திருக்கும் படத்தை சலிப்பில்லாமல் நகர்த்த பிகேவின் படத்தொகுப்பு பயன்பட்டிருக்கிறது.

எழுதி இயக்கியுள்ளார் சக்திவேல்.தோப்புக்குள்ளே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித்தனிதான் என்பது போல் ஒரு வீட்டுக்குள் இருந்தாலும் உடலால் கலந்தாலும் கணவன் மனைவி இருவருக்குமான மனநிலை வெவ்வேறானவை அதைப்புரிந்து இருவரும் நடந்து கொள்ளவேண்டும் எனும் பெருங்கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

– சரவணன்

Related Posts