வலிமை இறுதிக்கட்டப் படப்பிடிப்பு – இன்று தொடக்கம்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா,இசையமைப்பாளராக யுவன்ஷங்கர்ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு துரத்தலுடன் (சேஸிங்) கூடிய சண்டைக்காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் நடக்கிறதாம். இரண்டு நாட்கள் மட்டும் நடக்கவிருக்கிறது. அதுவும் பேட்ச் ஒர்க் எனப்படும் இணைப்புக்காட்சிகளை மட்டும் படமாக்குவதற்காகத்தான் இந்த இரண்டுநாட்கள் படப்பிடிப்பு என்று சொல்கிறார்கள்.
இந்த இரண்டுநாட்கள் படப்பிடிப்பை அப்படியே நீட்டித்து விடுபட்ட சண்டைக்காட்சியையும் படமாக்கும் திட்டமும் இருக்கிறது என்கிறார்கள்.
எப்படியோ ஆண்டுக்கணக்கில் நீண்டுகொண்டிருக்கும் வலிமை படத்தின் மொத்தப்படப்பிடிப்பும் முடிவுக்கு வருகிறது என்பதால் படக்குழுவினர் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்களாம்.
படப்பிடிப்புகளை முழுமையாக முடித்தபின்புதான் முதல்பார்வை மற்றும் முன்னோட்டம் ஆகியனவற்றை வெளியிடுவது என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.












