சினிமா செய்திகள்

மணிரத்னம் மீது பார்த்திபன் கோபம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், கார்த்தி, விக்ரம்,ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு 2019 டிசம்பரில் தொடங்கியது. அதன்பின் பல தடைகள் சிக்கல்களைத்தாண்டி படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது.

இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் முதல்பாகத்துக்கான பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் முதல்பாகம் நிறைவு பெற்றுவிடும் என்கிறார்கள்.

இந்நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் வந்துள்ளது.
இதனால் வேலைகள் நின்றுபோயிருந்தது.

இப்போது மீண்டும் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி கிடைத்திருப்பதால் பொன்னியின்செல்வன் படப்பிடிப்பை நடத்த இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துவரும் நடிகர் பார்த்திபனுக்கு, ஓர் ஆங்கிலப்படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறதாம். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்று தெரியாமல் இருப்பதால் அந்த ஆங்கிலப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள பார்த்திபன் விரும்பினாராம்.

இந்தத் தகவல் அறிந்த மணிரத்னம் குழுவினர் பார்த்திபனைத் தொடர்பு கொண்டு, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிவடையும்வரை வேறு படத்துக்குப் போகமாட்டேன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள் எனவே எப்போது நாங்கள் சொன்னாலும் நீங்கள் வரவேண்டியிருக்கும் அதனால் ஆங்கிலப்படத்தில் நடிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்களாம்.

இதனால் பார்த்திபன், மணிரத்னம் மீது கடுங்கோபத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Related Posts