சூரி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்று தொடக்கம் – விவரங்கள்
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரியவெற்றி விடுதலை படத்தின் கதைநாயகனாக சூரி நடித்திருந்தார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் கதைநாயகனான முதல்படத்தின் முதல்பாகத்திலேயே கனமான வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்கிற பெரியவரவேற்பைப் பெற்றார்.
இப்போது விடுதலை படத்தின் இரண்டாம்பாகத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.அப்படம் 2024 பொங்கல்நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றிற்கடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் தயாராகும் கொட்டுக்காளி படத்திலும் அவர் நாயகனாக நடித்திருக்கிறார்.இப்படத்தில் மலையாளத்தில் புகழ்பெற்ற நாயகி அன்னாபென் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இப்படத்தின் முதல்பார்வை மற்றும் விவரங்கள் வெளியாகி படத்துக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், சூரி கதாநாயகனாக நடிக்கும் புதியபடம் இன்று தொடங்கியிருக்கிறது.
கும்பகோணத்தில் தொடங்கியுள்ள அப்படத்தை எதிர்நீச்சல்,காக்கிச்சட்டை, கொடி, பட்டாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்குகிறார்.
இந்தப்படத்துக்குக் கதை எழுதியிருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன்.
இப்படத்தில் நாயகிகளாக ரேவதிஷர்மா மற்றும் ஸ்வேதாநாயர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களோடு சசிகுமார், நட்டி, மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர் உன்னிமுகுந்தன் உட்பட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்துக்கு இசை யுவன்ஷங்கராஜா.
சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ்ஜெயராஜ் மற்றும் சிங்கிள்ஷங்கரும் ஸ்மார்ட்போன்சிம்ரனும் ஆகிய படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டுயோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
நாயகனாகக் களமிறங்கிய முதல்படத்திலேயே பெரும் வெற்றியைப் பதிவு செய்த சூரி அப்படத்துக்குச் சற்றும் குறைவில்லாத குழுவினருடன் களமிறங்குகிறார்.
இதனால் தொடங்கும்போதே இந்தப்படத்துக்கு வியாபார வட்டங்களில் பெரும் வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.











