சினிமா செய்திகள்

ரஜினி 171 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – குறிப்பிடத்தக்க ஒற்றுமை

ரஜினிகாந்த் நடித்து வெளியாகி வெற்றி பெற்றுள்ள ஜெயிலர் திரைப்படம் அவருடைய 169 ஆவது படம். அதற்கடுத்து அவருடைய 170 ஆவது படமான லால்சலாம் படத்தை அவர் மகள் ஐஸ்வர்யா இயக்க லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறதென்றும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வந்துகொண்டிருந்தன.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 11,2023)காலை 11 மணிக்கு சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அந்நிறுவனம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171 ஆவது படம் குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.இந்தப்படத்தை எழுதி இயக்குகிறார் லோகேஷ்கனகராஜ், இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு சண்டைப்பயிற்சி செய்கிறார்கள் என்று கூறியுள்ளது.

லோகேஷ்கனகராஜ் படம் என்றாலே அதிரடிக்காட்சிகள் அதிகம் இருக்கும்.இப்படம் அறிவிக்கும்போதே கதாநாயகி மற்றும் ஒளிப்பதிவாளர் குறித்து எதுவும் சொல்லாமல் சண்டைப்பயிற்சி இயக்குநரை அறிவித்திருப்பதைப் பார்த்தால் அதிரடி மேலும் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த அறிவிப்பை ரஜினிகாந்த் இரசிகர்களும் லோகேஷ்கனகராஜ் இரசிகர்களும் வேகவேகமாகப் பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த அறிவிப்பின் மூலம் இன்னொரு செய்தியும் பகிரப்படுகிறது.அது என்னவெனில்? ஏற்கெனவே, நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் படம் இயக்கிக் கொண்டிருக்கும்போது இயக்குநர் நெல்சனுக்கு ரஜினி படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் ஜெயிலர்.

இப்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கியிருக்கும் லோகேஷ்கனகராஜுக்கும் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதுதான் அந்தத் தகவல்.

அவ்விரண்டு ரஜினி படங்களையுமே சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts