யோலோ – திரைப்பட விமர்சனம்
நீ ஒரு முறைதான் வாழ்கிறாய் என்பதை ஆங்கிலத்தில் சொன்னால் You Only Live Once என்று வரும். இதில் வரும் நான்கு சொற்களின் முதலெழுத்துகளை மட்டும் வைத்து வைக்கப்பட்டிருக்கும் பெயர் தான் யோலோ.
யோலோ என்ற பெயரில் வலையொளி நடத்துகிறார்கள் நாயகன் தேவும், நாயகி தேவிகாவும்.அதில் மற்றவர்களைக் கேலி கிண்டல் செய்கிறார்கள்.இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லி அதற்கான ஆதாரத்தையும் கொடுக்கிறார்கள்.
நடக்காத திருமணத்தை நடந்ததாக சிலர் ஆதாரங்களுடன் நிரூபிப்பதோடு, அந்தத் திருமணம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். தங்களுக்கே தெரியாமல் தங்களது திருமணம் நடந்திருப்பதால் அதிர்ச்சியடையும், நாயகனும், நாயகியும் அதன் பின்னணியைக் கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்கள். அவர்களது திருமண இரகசியத்தின் பின்னணி என்ன? அதை அவர்கள் எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? என்பதும் தான் யோலோ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் தேவ், இளமைத்துள்ளலுடன் இருக்கிறார்.ஒரு கதாநாயகனுக்குரிய அனைத்து அம்சங்களையும் சரியாகக் கொண்டிருக்கிறார்.அதற்கேற்ற வேடமும் அமைந்துவிட்டதால் இதில் சரியாகப் பொருந்தியிருக்கிறார்.
நாயகி தேவிகா, நாயகனுக்கேற்ற இணையராக இருக்கிறார்.அவருடைய அழகுக்கும் இளமைக்கும் ஏற்ற கதாபாத்திரம்.அதற்குத் தக்க அவருடைய நடிப்பு நன்று.
படவா கோபி,ஆகாஷ் பிரேம்குமார்,பிரவீன்,நித்தி பிரதீப்,திவாகர்,யுவராஜ்,விஜே நிக்கி,தீபிகா,தீப்சன்,சுப்ரு,சுவாதி நாயர்,பூஜா ஃபியா,சுபா கண்ணன்,கலைக்குமார் என ஏராளமானோர் படத்தில் இருக்கிறார்கள்.பொருத்தமாக இருக்கிறார்கள்.
சகிஷ்னா சேவியர் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையும் அளவு.
சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவில் படம் வண்ண மயமாக அமைந்து இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கிறது.
ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பில் படம் வேகமாக நகர்கிறது.
எஸ்.சாம் எழுதி இயக்கியிருக்கிறார்.இளைஞர்களை ஈர்க்கும் ஒரு படம், அதை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதன்படியே செயல்பட்டிருக்கிறார்.
– இளையவன்











