பரம்பொருள் – திரைப்பட விமர்சனம்

மிக மேலான பண்புகளைக் கொண்டு, எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கும், எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் பொருள்தான் பரம்பொருள்.ஆனால் இந்தப் பெயரில் வந்திருக்கும் படம் சொல்லும் பொருள் வேறு.
சிலை கடத்தல் சீசனா? இது. இந்தப்படத்திலும் சிலைதான் மையம். பெரும்பொருள் தரும் ஐம்பொன் சிலையைக் கடத்திப் பணம் பார்க்க நினைக்கிறார் ஒரு காவல் அதிகாரி.அவர் நேரடியாகச் செய்யவியலாது என்பதால் பெரிய தேவைக்காகச் சின்னத் திருட்டுகளில் ஈடுபடும் இளைஞரைப் பயன்படுத்துகிறார். அதனால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைப் பரபரப்புடன் சொல்லியிருக்கும் படம் பரம்பொருள்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் சரத்குமார்.நல்லவராகவே பார்த்த அவரை எதிர்மறையானவராகப் பார்க்கவேண்டியிருக்கிறது. அதிலும் அவர் குறை வைக்கவில்லை.சிறப்பாகச் செய்து பயப்பட வைக்கிறார்.
சரத்குமார் போன்ற முன்னணி நடிகருக்கு ஈடுகொடுக்க வேண்டும் வீட்டின் வறுமை, பணத்தின் தேவை, காதல்,கோபம் எனப்பலவற்றையும் வெளிப்படுத்தியாக வேண்டிய கனமான வேடம் அமிதாஷுக்கு.அவற்றில் முடிந்தவரை நிறைந்திருக்கிறார்.
நாயகி காஷ்மீராவுக்கு மையக்கதைக்குத் தேவையான சிலை சம்பந்தப்பட்ட வேலை என்று வைத்துவிட்டார்கள். அவர் நாயகனின் எண்ணத்தைப் புரிந்து செய்யும் எதிர்வினைகள் நன்று.அதனால் அமிதாஷ் காஷ்மீரா இணையில் பிழையில்லை.
வின்செண்ட் அசோகன், பால்கிருஷ்ணன், பாலாஜி சக்திவேல்,ரவி வெங்கட்,டி.சிவா ஆகியோர் பொருத்தமான தேர்வுகள்.
அமிதாஷ் தப்பு செய்யக் காரணமாக இருக்கும் சுவாதிகா, திரைக்கதை விறுவிறுப்பாக நகர நாமே காரணம் என்பதை நினைத்து நடித்திருக்கிறார்.
எஸ்.பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இரவுக்காட்சிகள் அதிகம் என்றாலும் இயல்பாகச் செய்து கவர்ந்திருக்கிறார்.
யுவன்ஷங்கர்ராஜாவின் பின்னணி இசை படம் முடிந்த பின்னரும் பின் தொடர்கிறது. படத்தின் தரத்தை உயர்த்த அவர் பெரிதும் பயன்பட்டிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் புது இயக்குநர் சி.அரவிந்தராஜ். இயக்குநர் ராமிடம் பயின்றவர் என்பதைக் காட்சிகளில் உணரமுடிகிறது. யூகிக்கக் கூடிய கதை என்றாலும் காட்சிகளில் மெருகேற்றவியலும் என்பதைக் காட்டியிருக்கிறார்.
பெரும்பொருள்.
– ஆநிரையன்