எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கான புதிய சமூகவலைதளம் – சென்னையில் தொடக்கம்
நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் செளந்தர்யா,டிவிட்ட்ர், முகநூல் போல் புதிய சமூகவலைதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.அதன் பெயர் ஹூட்.
முகநூல் மற்றும் ட்விட்டர் தளங்களில்,மக்கள் தங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் ஆகியனவற்றைப் பதிய முடியும்.
இந்த ஹூட் தளத்தில் தங்கள் குரலிலேயே தங்கள் கருத்துகளைப் பதிவிட முடியும் என்பதுதான் புதிது.
இதன்மூலம் எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் தங்கள் கருத்துகளைச் சமூகவலைதளம் மூலமாக உலகத்துக்குச் சொல்லமுடியும் என்கிற வசதி இந்தத் தளத்தின் மூலம் கிடைக்கிறது.
இதன் அறிமுகவிழா நேற்று (அக்டோபர் 25,2021) சென்னையில் நடந்தது.
அப்போது பேசிய செளந்தர்யா ரஜினிகாந்த்,
இன்று எங்கள் குடும்பத்துக்கு மிகவும் சிறப்பான நாள். எங்கள் அப்பா, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருது வாங்குகிறார். என் அக்கா கணவர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசியவிருது வாங்குகிறார். அதேநாளில் உலகம் முழுமைக்குமான ஒரு சமூக வலைதளத்தைச் சென்னையில் தொடங்குகிறோம்.
என் அப்பாவுக்கு தமிழில் எழுதத் தெரியாது. அதனால் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிடும் கருத்துகளைக் குரல்பதிவாக எனக்கு அனுப்புவார். அதை நான் தமிழில் எழுதி வெளியிடுவேன்.
அந்தவகையில், 2020 டிசம்பர் 3 ஆம் தேதி அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு,
ஜனவரியில் கட்சித் துவக்கம்,டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.
இதைக் குரல்பதிவாக எனக்கு அனுப்பினார்.
அப்போது அப்பா குரலில் இருக்கும் இதே கம்பீரத்துடன் இக்கருத்தை மக்களிடம் கொண்டு சென்றால் நன்றாக இருக்குமே? என யோசித்ததன் விளைவுதான் இந்த ஹூட் செயலி உருவாக்கத்துக்கு உந்துதலாக இருந்தது.
இதில், 15 இந்திய மொழிகளிலும் 10 சர்வதேச மொழிகளிலும் மக்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம். ஒரு நிமிடம் மட்டுமே இருக்கவேண்டும் என்பது முக்கிய விதிமுறை.
இந்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இப்புதிய சமூகவலைதளத்துக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.











