சிவகார்த்திகேயன் தனுஷ் படங்களால் பாதிப்பில்லை – காப்பான் வசூல் அறிவிப்பு
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது….
அனைத்து ஊடக நண்பர்களுக்கும்.. எங்கள் மகிழ்வான வணக்கம்.
எங்கள் இதயங்களில் நிறைவும், உதடுகளில் புன்னகையும் உங்களால் சாத்தியமாகியிருக்கிறது. ஒரு படத்தின் வெற்றி என்பது சகஜமானது. ஆனால் சாதனை வெற்றியென்பது அபூர்வமானது.
எங்கள் லைகா நிறுவனத்தின் தயாரிப்புகளில் நற்பெயரும், நல்ல வசூலும் தேடித் தந்தது காப்பான் திரைப்படத்தின் முதல் சாதனை. கேரளாவிலும், அயல் நாடுகளிலும் அதிரிபுதிரியான வசூல் கொண்டாட்ட சாதனை.
மொத்த வசூலில் 100 கோடியைத் தொட்ட படங்களின் பட்டியலில் காப்பானும் சேர்ந்ததும் முக்கிய சாதனை.
தமிழக விவசாய அமைப்புகள் அனைத்திலிருந்தும் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றது மகத்தான சாதனை. அத்தனைத் தரப்பு ரசிகர்களிடமிருந்தும் குவியும் பாராட்டுக்கள் இன்னுமொரு சாதனை.
இத்தனை சாதனைகளுக்கும் காரணமாய் இருந்த காப்பானின் அத்தனை நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், இந்த வெற்றியை அங்கீகரித்த ரசிகர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
ஆதரவாய் இருந்த, ஆழமாய் ரசனையாய் விமரிசித்த ஊடக நண்பர்களான உங்களுக்கும் எங்கள் இதயப்பூர்வமான நெகிழ்ச்சி கலந்த நன்றி.
லைகா நிறுவனம் தனது அடுத்தடுத்த பெரிய திரைப்பட முயற்சிகளை கம்பீரமாகத் தொடர.. நல்ல நம்பிக்கையை விதைத்திருக்கும் காப்பான் படக் குழுவினருக்கு மீண்டும் நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது அடுத்த வாரம் செப்டம்பர் 27 அன்று சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை படம் வெளியானது.
அதற்கடுத்து அக்டோபர் 2 ஆம் தேதி சிரஞ்சீவி நடித்த சைரா வும் அக்டோபர் 4 ஆம் தேதி தனுஷ் நடித்த அசுரன் படமும் வெளியானது.
இவற்றைத் தாண்டி காப்பான் படம் இவ்வளவு பெரிய வசூலைப் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் சூர்யா ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.










