சாஹோ – திரைப்பட விமர்சனம்
ஐதர்அலி காலத்துப் பழிவாங்கும் கதை. கோடிகளைக் கொட்டி மாயாஜாலம் காட்டியிருக்கிறார்கள்.
படம் தொடங்கும் போதே ராய் என்கிற பெரிய தாதா, தன் சாம்ராஜ்யத்தை எப்படி பெரிதாக்கினார் இப்போது என்ன நிலை என்பது உட்பட நீண்ட அறிமுகம் நிறைய பாத்திரங்களை அறிமுகப் படுத்துகிறார்கள்.
அதுவே போதும் என்றாகிவிடுகிற நேரத்தில்,பிரபாஸ் வருகிறார். அவர் வரும்போதே ஒரு சண்டையுடன் வருகிறார். ஒரு ஆளிடம் ஒரு வரித் தகவலைப் பெறுவதற்காக அரைமணி நேரம் சண்டை போட்டு அலுப்பூட்டுகிறார்.
அதன்பின் எவ்வித நம்பகத்தன்மையும் இல்லாத திருடன் போலிஸ் விளையாட்டு. இதில் பிரபாஸ் போலிஸா? திருடனா? என்பதில் இதுவரை சினிமாவில் இருபதாயிரம் முறை வந்துவிட்ட ஒரு திருப்பம்.
பிரபாஸ் தொடக்கத்தில் பார்க்கவே பாவமாகத் தோன்றுகிறார். பார்க்கப் பார்க்க அது பழகிப போய்விடுவதால் சிக்கலில்லை.
ஸ்பைடர் மேன் பேட் மேன் போன்றோருக்கெல்லாம் சவால்விடுகிற மாதிரி பறக்கிறார் பிரபாஸ். வித விதமான துப்பாக்கிகளை வைத்து வாணவேடிக்கை காட்டுகிறார்கள்.
அவரை நோக்கி நூறு முறை சுட்டாலும் அவர் மேல் குண்டு படாது. ஆனால் அவர் ஒருமுறை சுட்டாலே எதிரி மரணம்.
நாயகியாக ஷ்ரதா கபூர், விஜய்யின் தலைவா பட அமலாபால் போல காவல்துறை அதிகாரி வேடம்.
பிரபாஸோடு காதல் பாடல்களில் கவர்ச்சி உடை அணிவது உட்பட கதாநாயகிகளுக்கே உரிய எல்லா வேலைகளையும் செய்கிறார்.
ஜாக்கி ஷெராப், நீல் நிதின்முகேஷ், சங்கி பாண்டே, டினு ஆனந்த் உட்பட ஒரு டஜன் பேர் கோட் சூட் போட்டுக்கொண்டு, அந்த பிளாக் பாக்ஸ் என் கைக்கு வந்தாகணும் என்றலைகிறார்கள்.இவர்களோடு லால், அருண் விஜய் ஆகியோரும் இருக்கிறார்கள்.
அவர்களில் மும்பை போலிஸ் கமிஷனரும் ஐஜியும் அடக்கம் என்பதுதான் காமெடி.
ஷங்கர் எசான் லாய் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை. ஜிப்ரான் தன் பங்குக்கு பின்னணி இசையில் சோதிக்கிறார்.
படத்தின் மிகப் பெரிய பலம் பிரமிப்பூட்டும் காட்சிகள் தாம். பாடல் காட்சிகளில் வருகிற இடங்களை திரையில் பார்ப்பதே பாக்கியம் என்கிற அளவு பிரமாதமாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் மதி காட்சிகளை வடிவமைத்த விதமே அழகு.
எழுதி இயக்கியிருக்கிறார் சுஜீத். பழ்ழைய கதை, சலிப்பூட்டும் திரைக்கதை அமைத்து படுத்துகிறார்.
ஆயிரக்கணக்கானோரின் உழைப்பு அநியாயமாக வீணாகியிருக்கிறது.
இந்தப் பெரும் பாவத்திற்கு பிரபாஸே பொறுப்பு.
ரசிகர்களைகப் பொறுத்தவரை, ஒளிப்பதிவாளர் மதியின் புண்ணியத்தால் கொடுத்த பணத்துக்குப் பங்கமிருக்காது.