சிக்சர் – திரைப்பட விமர்சனம்
மாலை ஆறு மணிக்கு மேல் கண் தெரியாது என்கிற மாலைக்கண் நோய் உள்ள நாயகன் அதை மறைத்து காதலிக்கிறார். கல்யாணம் வரை போகிறார். அப்போது என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் வைபவ், கண் தெரியாத நேரங்களில் பொருத்தமாக நடித்திருக்கிறார். கண் தெரியாத நேரத்தில் நடனம் ஆடும்போது கூட பார்வையற்றவர்களின் உடல்மொழியைக் கடைபிடித்திருக்கிறார்.
நாயகி பாலக் லால்வாணி அழகாக இருக்கிறார். நன்றாக நடித்துமிருக்கிறார்.
வைபவின் நண்பராக வரும் சதீஷ், ரவுடியாக வரும் ராமர், அப்பாவாக நடித்திருக்கும் இளவரசு ஆகியோர் வரும் காட்சிகள் சிரிப்பதற்கென்றே எடுக்கப்பட்டிருக்கின்றன.
ராதாரவியின் பாத்திரமும் பெரிய வரவேற்பைப் பெறுகிறது.
வைபவின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி நன்று. வில்லன்களாக வருகிற ஆர்..என்.ஆர். மனோகர், ஏஜே ஆகியோரும் பொருத்தம்.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை தேவைக்கேற்ப இருக்கிறது.
பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒரு காட்சியில் தோன்றுகிறார்.
எழுதி இயக்கியிருக்கும் சாச்சி, ரசிகர்களைச் சிரிக்க வைப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார். அதற்காக எதைப்பற்றியும் கவலைப்படாமல் காட்சிகளை அமைத்திருக்கிறார்.
கடற்கரையில் நடக்கும் போராட்டம், அதில் வைபவின் நடவடிக்கைகள், வைபவ் ராதாரவி சந்திப்பு மற்றும் அதற்குப் பிறகான காட்சிகள் உட்பட பல காட்சிகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன.இதென்னங்க அபத்தமா இருக்கு? என்கிற கேள்வி வரவில்லையென்றால் சிரிப்பு நிச்சயம்
எல்லோரும் இயல்பாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்ட குடிப்பழக்கத்தை மாலைக்கண் நோயோடு ஒப்பிடும் காட்சி சரியாக அமைந்திருக்கிறது.
வைபவ் சிக்சர் அடித்திருக்கிறார்.