டாடா படத்துக்குக் கடும்போட்டி – வியக்க வைக்கும் புதியதகவல்
அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டாடா.நாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.இவர்களோடு கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா,ஹரிஷ்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர்.
கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஜென் மார்ட்டின். கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் சண்முக ராஜ்.
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத் குமார் தயாரித்துள்ள இந்தப்படம் அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.
கவின் போல் வளரும் கதாநாயகர்கள் நடிக்கும் படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனை என்பது படம் வெளியாகி வெற்றி பெற்றால் மட்டுமே நடக்கும்.
ஆனால், திரையுலகமே கேட்டு வியக்கும்படி, இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைப் பெற பல தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுள்ளன.
சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகிய முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் இப்படத்தின் ஒளிபரப்பு உரிமையைப் பெற முயன்றனவாம்.
இவற்றைத்தாண்டி இப்போது இப்படத்தின் உரிமையைப் பெற்றிருக்கிறதாம் கலைஞர் தொலைக்காட்சி.
இதற்காக அந்நிறுவனம் கொடுத்திருக்கும் தொகை சுமார் நான்கு கோடி என்று சொல்லப்படுகிறது.
இதனால் இப்படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். விசயமறிந்த மற்றோர் ஆச்சரியத்தில் வாய்பிளக்கிறார்கள்.











