இந்தியன் 2 படம் தொடர்பாக மூன்று முக்கிய முடிவுகள் – கமல் அதிரடி
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன்,காஜல் அகர்வால்,நெடுமுடி வேணு, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருந்த படம் இந்தியன் 2.
இப்படம், சனவரி 18,2019 அன்று படப்பிடிப்புடன் சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது.
அதன்பின் பல்வேறு இடையூறுகளுக்கிடையே படப்பிடிப்பு தொடர்ந்தது.படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா சிக்கல் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.
அதன்பின், ஷங்கர் தெலுங்குப்படம் இயக்கப் போனார்.கமல், விக்ரம் படத்தில் நடிக்கப்போனார். அதனால் இந்தியன் 2 படம் நடக்குமா? என்கிற சந்தேகம் இருந்துவந்தது.
இந்நிலையில், கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தியன் 2 படத்தைத் தொடங்கும் பேச்சுகள் நடந்தன.
உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பில் இணைவது என்று முடிவானதும் இந்தியன் 2 வேலைகள் வேகமடைந்துள்ளன என்கிறார்கள்.
அண்மையில், ரெட்ஜெயண்ட் நிறுவனம்,ராஜ்கமல் நிறுவனம் ஆகியோரோடு ஷங்கர் சந்திப்பு நடந்துள்ளது.
அச்சந்திப்பில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டதாம்.
மறைந்த நடிகர்கள் நெடுமுடி வேணு, விவேக் ஆகியோருக்குப் பதிலாக வேறு நடிகர்களை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பு நடத்துவது என்றும் நாயகியாக தமன்னா அல்லது த்ரிஷாவை ஒப்பந்தம் செய்வதெனவும் பேசப்பட்டதாம்.
விசயமறிந்த காஜல் அகர்வால், குழந்தை பிறந்த பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கேற்ப தான் தயாராகிவிட்டதாகவும் நானே நடிக்கிறேன் என்று கேட்டுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால், நாயகியாக அவரே தொடர்வார் என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதன்பின், கமல் அடுத்து நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்ட மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தைத் தள்ளிவைத்துவிட்டு இந்தியன் 2 படத்தை முதலில் முடித்துக் கொடுப்பது என்கிற அதிரடி முடிவை கமல் எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.











