சினிமா செய்திகள்

ஐஸ்வர்யாராஜேஷுக்கு மிரட்டல் – அறம் பிறழ்ந்த கோபிநயினார்

நயன்தாரா நடித்த அறம் படத்தை இயக்கிய கோபிநயினார் அதன்பின், ஐஸ்வர்யாராஜேஷை முதன்மையாக வைத்து ஒரு படத்தைத் தொடங்கினார்.

2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்தப்படம் பத்துநாட்கள் படப்பிடிப்பு நடந்ததோடு அப்படியே நின்று விட்டது.

அந்தப்படத்தை இரமேஷ் என்பவர் தயாரிப்பதாகச் சொல்லப்பட்டது. அவருக்கும் இயக்குநருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகப் படம் நடக்கவில்லை என்று அப்போது சொன்னார்கள்.

இப்போது இயக்குநர் கோபிநயினார், வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படம் இயக்கிவருகிறார். அந்தப்படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் திடீரென, 2018 இல் தொடங்கப்பட்ட படத்தின் தயாரிப்பாளர் இரமேஷோடு இணைந்து, ஐஸ்வர்யாராஜேஷ் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளாராம் கோபிநயினார்.

அதில், எங்கள் படத்தில் நடிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையைச் சம்பளமாகப் பேசி, குறிப்பிட்ட தொகையை முன்பணமாகப் பெற்றுள்ளார் ஐஸ்வர்யாராஜேஷ். இப்போது மீண்டும் அந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளோம். அதற்காக அவரிடம் தேதிகள் கேட்டால் தர மறுக்கிறார். எனவே நீங்கள் தலையிட்டு அவரிடம் தேதி வாங்கித் தரவேண்டும் என்று புகாரளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், ஐஸ்வர்யாராஜேஷிடம் பேசினார்களாம்.

அவர்களிடம், நான் அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது உண்மை. சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. அதன்பின் அந்தப்படத்துக்காகப் பலமுறை தேதிகள் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். ஆனால் அவர்கள் படப்பிடிப்பு நடத்தவில்லை. இந்தப்படத்தால் மேலும் சில படங்களின் வாய்ப்புகளை இழந்ததுதான் மிச்சம்.
அதுமட்டுமல்ல, அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோது என சம்பளம் இப்போதைவிட பலமடங்கு குறைவு. ஆனாலும், இப்போதும் இந்தப்படத்தில் நடிக்க நான் தயார்.இப்போது நான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களுக்கு வரிசையாகத் தேதி கொடுத்து வைத்திருக்கிறேன்.அதனால்,இன்னும் மூன்று மாதங்கள் கழித்து 2023 சனவரி மாதம் இந்தப்படத்துக்குத் தேதி தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாமல் உடனடியாகத் தேதி தரவேண்டும் என்று கோபிநயினார் தரப்பில் நெருக்கடி கொடுக்கிறார்களாம்.பலவிதங்களில் அவர்கள் கொடுக்கும் நெருக்கடிகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.

நான்காண்டுகளுக்கு முன் நின்று போன படத்தை வைத்துக்கொண்டு ஐஸ்வர்யாராஜேஷை மிரட்டுவதா? அறம் என்று படமெடுத்தவர் அறம் பிறழ்ந்து இவ்வாறு செய்யலாமா? என விசயமறிந்தவர்கள் கோபிநயினார் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

Related Posts