திரெளபதி – திரைப்பட விமர்சனம்
மனைவியையும் மைத்துனியையும் ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகிறார் நாயகன் ரிச்சர்ட். அவர் பிணையில் வெளியில் வந்த பின்பு அவருடைய நடவடிக்கைகள் அக்கொலைகளில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்துகிறது. என்ன மர்மம்? என்பதைச் சொல்வதுதான் படம்.
ரிச்சர்ட் பல ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தாலும் இந்தப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும். சிலம்ப ஆசிரியர் வேடத்துக்கு மிகப்பொருத்தமான உடலமைப்புடன் இருக்கிறார். சிறையிலிருந்து வந்த பின் எதுவுமே தெரியாத அப்பாவி போல் நடித்து அவர் செய்யும் செயல்களை நடிப்பில் நியாயப்படுத்துகிறார்.
திரெளபதி எனும் பெயரில் நடித்திருக்கும் ஷீலா, நாட்டில் நடக்கும் கொடுமைகளை எதிர்த்துப் போராடும் பெண்ணாக இருக்கிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவது மட்டுமின்றி பெண்களின் காவலராகவும் இருக்கிறார். அவ்வளவு தெளிவானவர் அஃறிணையான மண்ணையும் உயர்திணையான பெண்ணையும் சமமாகப் பார்ப்பது பொருத்தமாக இல்லை.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நிஷாந்த், சரியாக நடித்து வேடத்துக்குப் பெருமை செய்திருக்கிறார்.
மருத்துவராக நடித்திருக்கும் லெனாகுமார், சமூக சேவகி செளந்தர்யா, வழக்குரைஞராக நடித்திருக்கும் கருணாஸ்,கோபி, இளங்கோ உள்ளிட்ட எல்லோரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
மனோஜ்நாராயணனின் ஒளிப்பதிவு தேவையான அளவு இருக்கிறது. இரவுக்காட்சிகளில் ஒளியமைப்பு கச்சிதம்.
ஜூபினின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி அளவாக இருக்கிறது.
படத்தொகுப்பு செய்திருக்கும் தேவராஜ், முதல்பாதியைப் போல் பின்பாதியையும் செதுக்கியிருக்கலாம்.
எழுதி இயக்கியிருக்கிறார் மோகன்.ஜி. ஆணவக் கொலை என்று வருகிற செய்திகளை அப்படியே நம்பாதீர்கள் உண்மை வேறுமாதிரி இருக்கிறது என்று நிறுவ முயன்றிருக்கிறார்.
காதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம்கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்;கானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகள் உண்டாம்;ஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரேஅஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம்?காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்;கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.,
என்றார் பாரதியார்.
ஆனால் இவரோ காதல் என்று பின்னால் வரும் இளைஞர்களைச் சந்தேகப்படுங்கள் அவர்கள் திட்டமிட்டு உங்களை வீழ்த்திப் பணம் பறிப்பவர்கள் என்று பெண்களை எச்சரிக்கிறார்.அதுவும் இடைநிலைச் சாதிப் பெண்களை மட்டும்.
பத்திரப்பதிவு அலுவலங்களில் கண்காணிப்புக் கருவிகள் வேண்டுமென்பது சரி, பெற்றோர் முன்னிலையில் பதிவுத்திருமணம் என்பது அபத்தம்.
ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு பெண் வருவதற்குள் அவரைப் பற்றிச் சொல்லப்படும் கட்டுக்கதைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமளவுக்கு எல்லோருமே உணர்ச்சிவசப்படுவார்களா? அக்கூட்டத்தில் ஒருவர் கூட அறிவுப்பூர்வமாக ஆற்றுப்படுத்துவர் இல்லையா?,ரிச்சர்ட் சென்னை வந்து தேநீர் விற்கிறார் எனும்போது அவரை யாருக்குமே தெரியவில்லை என்பது ஷீலாவைப் பாதுகாக்கும் மருத்துவருக்கு ரிச்சர்ட் சிறையிலிருந்து வந்ததே தெரியாது என்பது உட்பட பல ஏற்றுக்கொள்ள முடியாத பிழைகள் இருந்தாலும் அவற்றைத் தாண்டி படத்தைக் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.











