விமர்சனம்

ஜெயிலர் – திரைப்பட விமர்சனம்

ஒரு நேர்மையான காவல் அதிகாரி கொலை செய்யப்படுகிறார். அதனால் சிறைக்கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்பு தானுண்டு தன் குடும்பமுண்டு என அமைதியாக வாழந்து கொண்டிருக்கிற அப்பா வெகுண்டெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் ஜெயிலர்.மகனாக வசந்த்ரவியும் அப்பாவாக ரஜினிகாந்த்தும் நடித்திருக்கிறார்கள்.

ரஜினியின் தோற்றமும் உடைகளும் அவருக்கு மரியாதை பெற்றுத்தரும் வண்ணம் அமைந்திருக்கின்றன. இதுபோன்ற கதாபாத்திரங்களை அவர் ஏற்கெனவே செய்திருப்பதால் மிக இயல்பாக நடித்திருக்கிறார். வெறும் முத்துவேல்பாண்டியன், டைகர் முத்துவேல்பாண்டியனாக மாறுவது இரசிகர்களுக்கு விருந்து.

மோகன்லால், சிவராஜ்குமார்,ஜாக்கி ஷெராப் ஆகியோருக்கு அவர்கள் உயரத்துக்கேற்ற வேடம் இல்லையெனினும் இந்தக்கதைக்குத் தேவையான அளவு பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தந்த மொழி இரசிகர்களுக்கு அவர்கள் வரும் காட்சிகள் பெரிதும் பிடிக்கும்.

நகைச்சுவைக்கு யோகிபாபு இருக்கிறார். அவருடைய வேலையை நிறைவாகச் செய்து சிரிக்க வைக்கிறார்.

ரஜினியின் மனைவியாக ரம்யாகிருஷ்ணன், மருமகளாக மிர்னாமேனன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பெரிய வேலை இல்லையெனினும் கவனிக்கும்படியான பாத்திரங்கள்.

காவாலா பாடல் மூலம் ஜெயிலரைக் கவனிக்க வைத்தார் தமன்னா.படத்துக்கும் அது பலமாக அமையும் என்று நினைத்தால் படத்தைத் தடுமாற வைக்கிறார்.

பல படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்திருக்கும் விநாயகனுக்கு இந்தப்படத்தில் பெரிய வேடம். அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

அனிருத் இசையில் காவாலா பாடல் இளைஞர்களுக்கும் ஹுக்கும் பாடல் இரசிகர்களுக்குமானது. பின்னணி இசை வழக்கம்போல் இருக்கிறது.

விஜய்கார்த்திக்கண்ணனின் ஒளிப்பதிவில் கதையில் இருக்கும் வன்முறை காட்சிகளில் தெறிக்கிறது.

படத்தொகுப்பாளர் ஆர்.நிர்மல், இன்னும் அதிகம் வேலை பார்த்திருக்கவேண்டும். இரண்டு மணி ஐம்பது நிமிடம் என்பது கூடுதல்.

ரஜினிகாந்த்தின் மதிப்பு குறையாமல் தன்னுடைய பாணி படத்துக்குள் அவரைக் கொண்டுவர முயன்றிருக்கிறார் இயக்குநர் நெல்சன்.அந்த எண்ணத்தில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

அமைதியான ரஜினி அப்படியே தொடரப்போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் அமைதிக்காட்சிகளை இரசிக்க வைத்திருக்கிறார்.

எளிதில் யூகிக்கக்கூடிய கதையில் இறுதியில் யாராலும் யூகிக்க முடியாது என நினைத்து ஒரு திருப்புமுனையை வைத்து அது பெரிதாக உதவும் என்று எதிர்பார்த்திருக்கிறார்.

ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் ஆகியோருடைய அசுர பலம் படத்தைப் பாதுகாத்து நிற்கிறது.

– புனிதன்

Related Posts