விமர்சனம்

கனெக்ட் – திரைப்பட விமர்சனம்

நயன்தாரா, வினய் தம்பதியினருக்கு பதினைந்து வயது பெண் குழந்தையாக ஹனியா நபிஷா. நயன்தாராவின் அப்பா சத்யராஜ். வினய் மருத்துவராக இருக்கிறார். உயர்நடுத்தர வர்க்கக் குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

கொரோனா வருகிறது. வினய் மருத்துவமனையிலேயே தங்கி மருத்துவம் பார்க்கிறார். பல உயிர்களைக் காப்பாற்றிய அவரையும் கொரோனா பலி கொள்கிறது.

துடித்துப் போகிறது குடும்பம். மகள் ஹனிபா, அப்பாவுடன் பேசவேண்டும் என்கிற தீராத ஆசையில் ஆவிகளுடன் பேசும் முறையில் பேச முயல்கிறார். அதில் நேரும் ஒரு தவறு காரணமாகப் பெரும் சிக்கல் உண்டாகிறது.

அதேசமயத்தில் நயன் தாராவுக்கும் ஹனிபாவுக்கும் கொரோனா என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் படுகிறார்கள்.

இந்தநிலையில் உண்டான அந்தப் பெரிய சிக்கலை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதைப் படபடப்புடன் சொல்லியிருக்கும் படம் தான் கனெக்ட். 

பதினைந்து வயதுப் பெண்ணுக்கு அம்மா என்று சொன்னால்தான் தெரியும் என்கிற மாதிரி இருக்கிறார் நயன்தாரா. அவர் நன்றாக நடித்திருக்கிறார் என்று தனியாகச் சொல்லவேண்டியதில்லை.கடவுள் மீது முழுமையான நம்பிக்கை இல்லாத அவர் ஒருகட்டத்தில் கடவுளை முழுமையாக நம்பவேண்டிய இடத்தில் தடுமாறுகிறார். அந்தக்காட்சி அவருடைய நடிப்புத்திறமைக்குச் சான்று எனலாம்.

அப்பாவாக நடிக்கும் சத்யராஜ் மிக எளிதாக அந்தப்பாத்திரத்துக்கு வலுச்சேர்க்கிறார்.தம் உயிராகக் கருதும் உறவுகளுக்குக் கண்முன்னே நடக்கும் கொடுமையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் கொடூரமான மனநிலையைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சில காட்சிகளில் வந்தாலும் வினய், பாத்திரமும் நடிப்பும் சிறப்பு.இந்திநடிகர் அனுபம்கெரின் அனுபவ நடிப்பு பலம்.
மகளாக நடித்திருக்கும் ஹனிபாநபிஷாவும் கவனம் ஈர்க்கிறார்.

பெரும்பாலும் இருட்டிலேயே நடக்கும் காட்சிகளை மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியின் ஒளிப்பதிவு காப்பாற்றியிருக்கிறது.

பிரித்விசந்திரசேகரின் பின்னணி இசை திகில் அனுபவத்தைக் கொடுக்கிறது.

பேய் வருகிறது ஆனால் அதன் நோக்கம் என்று சொல்லப்படும் காரணம் மிக மிக பலவீனமாக இருப்பது பெரும் குறை.இந்தப்படத்தில் வருவது ஆங்கிலப் பேய் போலும். ஆங்கிலத்திலேயே பேசி அனுப்பிவிடுகிறார்கள்.
காட்சிகளை அமைப்பதில் கொடுத்திருக்கும் கவனத்தை கதை மற்றும் திரைக்கதையிலும் இயக்குநர் அஸ்வின்சரவணன் செலுத்தியிருக்கவேண்டும்.

கனெக்ட் – காட்சி அனுபவம்

Related Posts