மாவீரன் -திரைப்பட விமர்சனம்
ஒரு சாமானியன் சாதனையாளனாக மாறும் கதைகள் நிறைய வந்துள்ளன. அவருடைய மாற்றத்திற்கான காரணத்தைப் புதிதாக உருவாக்கி கவனிக்க வைத்திருக்கும் படம் மாவீரன்.
சென்னையின் பூர்வகுடிகளை அவர்கள் இருப்பிடத்திலிருந்து பிடுங்கி எடுத்து வேறொரு இடத்தில் நட்டுவைக்கும் நிலையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இந்தக் கதை இருக்கிறது.
அவ்வாறு செல்லும் குடிசைப்பகுதி மக்களில் ஒருவராக சிவகார்த்திகேயன். அம்மா சரிதா மற்றும் தங்கை மோனிசாவுடன் வசித்துவருகிறார். புதிதாகக் குடியேறிய அடுக்குமாடிக் குடியிருப்பின் தரம் அந்தரமாக இருக்கிறது. அது குறித்துக் கேள்வி கேட்டால் ஓர் அமைச்சரே எதிரில் நிற்கிறார். அவரை ஒரு சாமானிய ஓவியன் எப்படி எதிர்கொள்கிறான்? என்பதுதான் திரைக்கதை.
சென்னை குடிசைவாழ் மக்கள் பார்த்தாலும் இவர் நம்ம வீட்டுப் பையன் போலவே இருக்கிறாரே என்று சொல்லுமளவு தன் வேடத்துக்காக உழைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.பயந்த சுபாவி என்பது பேச்சாக மட்டும் இல்லாமல் செயலாலும் இருக்கிறது. அதன்பின் அவர் மாவீரனாவது ஏற்றுக்கொள்ளும்படி அமைந்திருக்கிறது.
நாயகியாக அதிதிஷங்கர் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு வேலை வாங்கித் தரும் வேலை அவருக்கு. அதை மட்டும் செய்துவிட்டுக் காணாமல் போகிறார். முதல்படமான விருமனில் பல திறமைகளை வெளிப்படுத்திய அவருக்கு இந்தப்படத்தில் அவ்வளவு வேலை இல்லை.
சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடிக்க சரிதாவைத் தேடிப்பிடித்து அழைத்துவர என்ன காரணம்? என்கிற கேள்விக்கு விடையாக அவருடைய பாத்திரப்படைப்பு அமைந்துள்ளது. அதற்கு தன் நடிப்பினால் சிறப்புச் சேர்த்திருக்கிறார் சரிதா.
அரட்டலும் உருட்டலுமான அமைச்சராக நடித்திருக்கிறார் மிஷ்கின். இதற்காக இதுவரை இருந்த எந்த அமைச்சரையௌம் நினைவுபடுத்துகிற மாதிரி அவர் நடிக்கவில்லை. இனிமேல் இவரைப் போல் நிஜ அமைச்சர்கள் நடந்து கொள்ளாமலிருப்பது நல்லது.
சிரிக்க வைப்பதற்கென்றே வைக்கப்பட்டிருக்கிற யோகிபாபு, அதில் குறை வைக்கவில்லை.
அரூபமாக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி.அது தத்ரூபமாக இருக்கிறது.
விதுஅய்யன்னாவின் ஒளிப்பதிவு, இதுவரை குடிசைப்பகுதி மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பற்றி அறியாதவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
பரத்ஷங்கரின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.அதிக வேலை கேட்கும் பின்னணி இசை அளவு.
முதல்படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் மடோன் அஸ்வின் இந்தப்படத்திலும் அதைத் தொடர முயன்றிருக்கிறார். அதற்கேற்ற கதை இருக்கிறது. அந்த அளவுக்குத் திரைக்கதை இல்லை.ஆனாலும் நாயகன் சிவகார்த்திகேயன் மற்றும் யோகிபாபு ஆகியோர் பேசும் வசனங்கள் மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.
– கோபாலன்











