அருண்விஜய் படத்தின் பெயரை மாற்றிய சுபாஸ்கரன் – ஏன்?
இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் மிஷன்-சாப்டர் 1.
இந்தப்படத்துக்கு அச்சம் என்பது இல்லையே என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இப்போது இப்படி மாற்றியிருக்கிறார்கள்.
இப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, சிறுமி இயல், விராஜ், ஜேசன் ஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார். ஏ.மகாதேவ் கதை எழுத, திரைக்கதை வசனம் எழுதி விஜய் இயக்கியுள்ளார்.
முழுக்க முழுக்க உணர்வுப்பூர்வமான அதிரடிப்படமாக உருவாகியிருக்கிறது. இலண்டனில் நடக்கும் கதையம்சம் கொண்டதால் இப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு இலண்டனிலேயே நடந்துள்ளது.
இப்படம் குறித்து நடிகர் அருண் விஜய் கூறியதாவது….
இயக்குநர் விஜய் சாருடன் இணைந்தபோது மதராசப்பட்டினம் போல ஒரு பெரிய படமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.அவர் இந்தக் கதையைச் சொன்னார். கதையில் ஆக்ஷனோடு எமோஷனும் இருந்தது. அவரும் இந்தப் படம் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.இப்போது படம் முடிந்துவிட்டது. மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்று சொல்வதை விட படம் முழுவதிலும் ஆக்ஷன் மூட் இருக்கும். அது இரசிகர்களுக்குச் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும்.
இந்தப் படத்தில் கடினமாக உழைத்திருக்கிறேன்.ஒவ்வொரு படத்திலும் உடலை வருத்திக்கொண்டு நடிப்பதுபோல் அமைகிறது. இது என் வீட்டில் இருப்பவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. இருந்தாலும், அனைத்துவிதமான வேடங்களில் நடிக்கவேண்டும், பெரிய இயக்குநர்களின் படங்களில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக இப்படிக் கடினமாக உழைக்கிறேன். இது தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இயக்குநர் விஜய் இப்படம் குறித்துக் கூறியதாவது….
முதலில் பெயர் மாற்றம் பற்றிக் கூறிவிடுகிறேன்.படம் முழுமையாக முடிவடைந்த பின்பு, இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சார் பார்த்தார்கள். படத்தைப் பார்த்ததும் படம் மிகப்பெரிய ஆக்ஷன் படமாக இருக்கிறது,எனவே, படத்தைத் தமிழ் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிடலாம் என்று சொன்னார்கள். அதன்பின், தற்போது இருக்கும் தலைப்பு தமிழுக்குச் சரியாக இருக்கும், ஆனால் மற்ற மொழிகளில் சரியாகப் பொருந்தாது என்று சொன்னதோடு, அனைவரையும் உடனே சென்று சேரக்கூடிய தலைப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால் ‘மிஷன் – சாப்டர் 1’ என்ற பெயரை வைத்தோம்.
இந்தப்படத்தின் கதையை எழுதிய ஏ.மகாதேவ் சார், முழுக்க முழுக்க இலண்டனில் நடப்பது போல எழுதியிருந்தார். அதனால் படப்பிடிப்பு முழுவதையும் அங்கேயே நடத்தத் திட்டமிட்டோம். இலண்டனில் நடக்கும் கதைக்காக சென்னையிலும் படப்பிடிப்பு நடத்தினோம்.இங்கு இலண்டன் சிறைச்சலை போல் பெரிய அரங்கம் ஒன்றை அமைத்தோம். சுமார் 5 கோடி ரூபாய் செலவில் 4.5 ஏக்கர் நிலப்பரப்பளவில் போடப்பட்ட அந்த அரங்கம் மழை மற்றும் புயல் காரணமாக இரண்டு முறை பாதிப்படைந்து பிறகு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதற்குப் பெரும் செலவு பிடித்தது. அதுமட்டுமின்றி, சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளாக நடிக்க 250 வெளிநாட்டினரை சென்னைக்கு அழைத்து வந்து நடிக்க வைத்திருக்கிறோம். இதற்கும் பெரும் தொகை செலவானது.
அவற்றைச் சமாளித்து வெற்றிகரமாக படத்தை முடித்ததற்கு ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் நிறுவனத் தயாரிப்பாளர் இராஜசேகர் சார் முக்கிய காரணம்.
இப்படி ஒரு பலமான ஆக்ஷன் கதையை யாரை வைத்துச் செய்வது? என்று யோசித்த போது தான் அருண்விஜய் சார் நினைவுக்கு வந்தார். உடனே அவரிடம் கதையைச் சொல்லி, இந்தக் கதையை நீங்கள் செய்தால்தான் சரியாக இருக்கும் என்றேன். அவரும் சம்மதித்தார். படத்திற்குள் அவர் வந்த பிறகு எந்த விசயத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை. ஆபத்தான சண்டைக்காட்சிகளில் டூப் போடலாம் என்று சொன்னால், நானே செய்கிறேன் என்று சொல்லி நடிப்பார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பல முறை அவருக்குக் காயம் ஏற்பட்டது. இலண்டனில் பேருந்து ஒன்றில் ஒரு சண்டைக்காட்சியைப் படமாக்கினோம், அப்போது அவர் காலில் அடிபட்டு வீங்கிவிட்டது. மிகப்பெரிய பாதிப்பாக இருந்தாலும் அறுவை சிகிச்சை செய்யாமல் சில நாட்கள் சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பிறகு நடித்தார்.அதன்பின்னும் சண்டைக்காட்சிகள்தான் எடுத்தோம். எந்த இடத்திலும் முடியாது என்று சொல்லாமல் நடித்தார். ஒரு முறை டம்மி சங்கிலி சரியில்லை என்றதும் நிஜ சங்கிலியைக் கையில் சுற்றிக்கொண்டு சண்டைபோட வைத்தோம், அந்தச் சங்கிலி மிகப்பெரியதாக இருக்கும். அதை அவர் கையில் கட்டிக்கொண்டு நடித்த போது கையில் இரத்தம் வடிந்தது. ஆனால், அவர் நிறுத்தாமல் அந்தக் காட்சியில் நடித்தார். அவர் கையில் இரத்தம் வருவதை நான் பார்த்தாலும் காட்சியைப் பாதியில் நிறுத்தாமல் தொடர்ந்து படமாக்கினேன்.அவர் அந்த வலியைத் தாங்கிக்கொண்டு நடித்துக்கொடுத்தார். அவருடைய அப்படி ஒரு அர்ப்பணிப்பால் தான் படம் சிறப்பாக வந்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.











