September 23, 2023
சினிமா செய்திகள்

மீண்டும் விடுதலை படப்பிடிப்பு – தயாரிப்பாளர் அதிர்ச்சி

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி,விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான ‘விடுதலை’ திரைப்படத்தின் முதல்பாகம் மார்ச் 31 ஆம் தேதி வெளியானது.

ஆர்.எஸ்.இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்தப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

இப்படத்தின் இரண்டாம்பாகம் அடுத்த ஆண்டு சனவரியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. முதல்பாகம் பெரிய வெற்றி என்பதால் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் முதல்பாகம் வெளியீட்டின் போதே இரண்டாம்பாகத்தின் படப்பிடிப்பும் நிறைவு பெற்றுவிட்டதாகச் சொல்லப்பட்டது.

ஆனால், இப்போது இரண்டாம்பாகத்துக்கான படப்பிடிப்பை மீண்டும் நடத்தவேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறன் சொல்லியிருக்கிறார்.

உள்ளுக்குள் அதிர்ச்சி அடைந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளைத் தயாரிப்பாளர் செய்திருக்கிறாராம்.

தொடக்கத்தில், பேட்ச் ஒர்க் தான் ஒரு பத்துநாள் படப்பிடிப்பு இருக்கும் என்று சொன்னவர்கள், அடுத்தடுத்து சுமார் நாற்பது நாட்கள் வரை படப்பிடிப்பு என்று சொல்லியிருக்கிறார்களாம்.

அடுத்த வாரத்தில் திண்டுக்கல் சிறுமலையில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அங்கு பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.அங்கு சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்ட்ர்ஹெயினை வைத்து சண்டைக்காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அடுத்தகட்டப் படப்பிடிப்பு அதற்குப் பின் முடிவு செய்யப்படும் என்கிறார்கள்.

இரண்டுபாகங்களுக்குமான மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதாகச் சொல்லப்பட்ட படப்பிடிப்பு இப்போது மீண்டும் தொடங்குவது ஏன் என்றால், முதல்பாகத்திற்குக் கிடைத்த விமர்சனங்களையொட்டி திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறாராம் இயக்குநர் வெற்றிமாறன். அதனால் மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாம்.

அதனால், படத்தில் இப்போது இருக்கும் நடிகர்களைத் தாண்டி புதிதாகச் சில நடிகர்கள் இணையும் வாய்ப்பும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

படம் வெளியாக இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால் அதற்குள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.

Related Posts