போர் தொழில் – திரைப்பட விமர்சனம்

கொடூரமான கொலைகள் நடக்கின்றன, அவற்றை துப்புதுலக்கும் காவல்துறை அதிகாரிகள், அவர்களுக்குள் நடக்கும் நீயா நானா? போட்டி, அவற்றைத் தாண்டி தொழிலில் அவர்கள் காட்டும் திடம், குற்றவாளி யார்? ஏன்? ஆகியனவற்றை அழகாக வரிசைப்படுத்தியிருக்கும் படம் போர் தொழில்.
சரத்குமாரின் வேடம் அவருடைய அனுபவத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது போலவே அமைந்திருக்கிறது. எதையும் சாதிக்கும் அறிவுத்திமிரை அழகாக வெளிப்படுத்துகிற வேடம். மிகச்சிறப்பாகச் செய்து வரவேற்புப் பெறுகிறார்.
சற்று சறுக்கினாலும் பாதாளத்துக்குப் போய்விடும் ஆபத்துடன் கூடிய, சரத்குமாருக்கு இணையான வேடத்தை இயல்பாகச் செய்து நல்ல பெயரைத் தட்டிச்செல்கிறார் அசோக்செல்வன்.நடிப்பில் சோடை போகாத அவருக்கு மீசையற்ற தோற்றமும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.
நாயகி நிகிலாவிமலும் காவல்துறையிலேயே இருக்கிறார். கதையில் மூன்றாமிடத்தில் இருந்தாலும் நடிப்பில் நற்பெயர் பெறுகிறார்.
நிழல்கள் ரவி, தேனப்பன்,ஓஏகே.சுந்தர்,சந்தோஷ் கீழட்டூர், சுனில்சுகடா, ஹரீஷ்குமார் உள்ளிட்டு படத்தில் நடித்துள்ளோர் எல்லோரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.
கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவில் இரவுக்காட்சிகளிலும் தெளிவு, மற்ற காட்சிகளும் நிறைவு.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படம் இலகுவாக நகர உதவியொருப்பதோடு எப்போதும் படபடப்புடன் பார்வையாளர்களை வைத்திருக்கவும் பயன்பட்டிருக்கிறது.
ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு, திரைக்கதையின் தன்மையை உணர்ந்திருக்கிறது.
போர் தொழில் என்று பெயர், விறைப்பான காவல்துறை அதிகாரிகள் விசாரணைதான் கதை ஆகியனவற்றை வைத்துக் கொண்டு ஆதலினால் அன்பு செய்வீர் என்கிற ஆழமான கருத்தை விதைத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ்ராஜா.
அந்தக் கருத்து விரல்நீட்டிச் சொல்லப்படவில்லை என்பதும் கடைசிவரை விறுவிறுப்புடன் காட்சிகளைக் கொண்டு சென்றிருக்கிறார் என்பதும் திரைமொழியில் அவர் சாதித்திருக்கிறார் என்பதற்கான எடுத்துக்காட்டு.
– தாசன்