பட்டத்து அரசன் – திரைப்பட விமர்சனம்
நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஊருக்காகக் கபடி விளையாடி வரும் ராஜ்கிரணுக்கு அந்த ஊரில் சிலை வைத்து மரியாதை செய்கிறார்கள். அதே ஊர்க்காரர்கள் அவரது சிலையை உடைத்தெறியவும் செய்கிறார்கள்.
ஏன் அப்படி நடந்தது? அதற்கு யார் காரணம்? அதை ராஜ்கிரண் குடும்பம் எப்படி எதிர்கொண்டது? இப்படிப் பல கேள்விகளுக்கு விடை சொல்லும் படம் பட்டத்து அரசன்.
மூத்த கபடி வீரர் பொத்தாரி என்பவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர் பெயரை ராஜ்கிரணுக்கு வைத்திருக்கிறார்கள். அவரும் அதற்கு எவ்விதக்குறையும் வந்துவிடாமல் நடித்திருக்கிறார். கன்னத்தில் உதைத்த கபடி வீரரை வளைத்துப் பிடிக்கும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார்.
பாசமிக்க பேரனாக அதர்வா நடித்திருக்கிறார். தாத்தா, பெரியப்பா,மாமா ஆகியோர் ஒதுக்கினாலும் திரும்பத் திரும்ப அவர்களோடு சேர நினைக்கிறார். இக்காலத்தில் அரிதாகிப் போன உணர்வு. அதைச் சரியாகச் செய்திருக்கிறார்.
நாயகியாக ஆஷிகாரங்கநாத் என்கிற புதுமுகம் நடித்திருக்கிறார். குடும்பப்பாங்கு அளவான கவர்ச்சி நிதானமான நடிப்பு என முதல்படத்திலேயே கவனம் ஈர்க்கிறார்.
ஜெயப்பிரகாஷ், துரைசுதாகர், சிங்கம்புலி,செந்தி, ராஜ் அய்யப்பா, பாலசரவணன், ராதிகா, ஆர்.கே.சுரேஷ், ரவிகாளே உட்பட படத்தில் ஏராளமான நடிகர்கள்.
எல்லோருக்கும் சமவாய்ப்பு கொடுத்து திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர். அவர்களும் தங்கள் பங்கை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
லோகநாதன் சீனிவாசனின் ஒளிப்பதிவில் தஞ்சை மாவட்ட கிராமங்களின் அழகு காணக்கிடைக்கிறது.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்டு இரசிக்கும் இரகம். பின்னனி இசையும் அளவாக அமைந்திருக்கிறது.
படத்தொகுப்பு செய்திருக்கும் ராஜாமுகமது, நீட்டிமுழக்காமல் தேவையானவற்றைத் தொகுத்திருக்கிறார்.
தஞ்சை மாவட்ட கிராமத்து வாழ்வியல், குடும்பப் பாசம், அவர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கும் கபடி விளையாட்டு ஆகியனவற்றை மையமாக வைத்து ஒரு நல்ல குடும்பக்கதையைப் பரிமாறியிருக்கிறார் இயக்குநர் சற்குணம்.











