காரி – திரைப்பட விமர்சனம்
ஜல்லிக்கட்டு என்பது அது நடக்கும் ஒருநாள் நிகழ்வு மட்டும்ன்று, அது உழைக்கும் மக்களின் ஊனோடும் உயிரோடும் கலந்து அவர்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்பதை இரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கும் படம் காரி.
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இரண்டு கிராமங்களுக்குப் பொதுவான ஒரு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்புக்குப் போட்டி ஏற்படுகிறது.
அதற்காக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தி அதில் எந்த ஊர் வெல்கிறதோ? அந்த ஊருக்கே கோயில் நிர்வாகம் என்று முடிவாகிறது.
அதுமட்டுமின்றி வறட்சியின் பிடியில் இருக்கும் அந்த கிராமத்தை இராமநாதபுரத்தின் குப்பைத் தொட்டியாக மாற்ற முயலும் அரசாங்கம், அடங்காத காளைகளை அடிமாடாக்கி சுகம் காணும் மாட்டிறைச்சி நிறுவனத்தினரின் ஆணவ வெறி ஆகியனவும் அந்தக் கிராமத்தை மிரட்டுகிறது.
இவற்றை எப்படி அந்தக் கிராமம் எதிர்கொண்டது என்பதை மண்மணத்தோடு சொல்லியிருக்கிறார்கள்.
சென்னையில் பந்தயக்குதிரை ஓட்டுபவராக அறிமுமாகிறார் சசிகுமார். பின்னால் காளைகளோடு உறவாடுவதற்கான முன்னோட்டமாக அது அமைந்திருக்கிறது. தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் நேரத்திலும் ஊருக்காக உயிரைவிடவும் துணியும் நேரத்திலும் பொறுப்புடன் நடித்திருக்கிறார் சசிகுமார்.
சசிகுமாரின் அப்பாவாக வரும் ஆடுகளம் நரேனும் சசிகுமாரின் இணையாக வரும் பார்வதி அருணும் கதையை காவியமாக்குகிறார்கள். உன்னை நம்பியிருந்த உயிருக்குத் துரோகம் பண்ணிட்டியேடா? என்று ஆடுகளம் நரேன் பதறுவதும், நான் வருவேன்னு கறுப்பன் நம்பிக்கிட்டிருப்பானே? என்று பார்வதிஅருண் கதறும் காட்சியும் சிலிர்க்க வைக்கின்றன.
நாயகி பார்வதிஅருணுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
தொழிலதிபராக வரும் ஜேடி.சக்ரவர்த்தி, அவர் மனைவி சம்யுக்தா, குதிரைகளின் உரிமையாளராக நடித்திருக்கும் நடிகர்திலகத்தின் மூத்தமகன் ராம்குமார், அவருடன் வரும் அம்முஅபிராமி, நாயகியின் அப்பா பாலாஜிசக்திவேல், கிராமத்து தலைவர் நாகிநீடு உள்ளிட்ட நடிகர்கள் படத்தின் தரத்தை உயர்த்தப் பயன்பட்டிருக்கிறார்கள்.
நகைச்சுவைக்காக ரெடின்கிங்ஸ்லி வருகிறார்.
இமானின் இசையில் சாஞ்சிக்கவா பாடல் சுகம்,எங்கும் ஒளி பிறக்குமே பாடல் சிலிர்ப்பு. பின்னணி இசை சிறப்பு.
கணேஷ்சந்திராவின் ஒளிப்பதிவில் சென்னை நகர குதிரைகள் போட்டியும் கிராமத்து ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வாழ்வியலும் உள்ளது உள்ளபடி பதிவாகியிருக்கிறது.காரி காளையைப் பார்க்கும்போதே பெருமிதம் கொள்ள வைத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ஹேமந்த், யார் இவர்? என எல்லோரையும் கேட்கவைத்திருக்கிறார்.நுட்பமான பல காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் தமிழரின் பெருமைகளைப் பறைசாற்றியிருக்கிறார்.
சாமானிய கிராமத்து மனிதர்களும் அவர்களுடைய சொல்லாட்சி, உடல்மொழி, தோற்றங்கள் ஆகியனவற்றோடு சிறுதெய்வ வழிபாடு அதன் மீதான கிராமத்து மக்களின் அதீத நம்பிக்கைகள் ஆகியனவற்றைப் படத்துக்குப் பலம் சேர்க்கப் பயன்படுத்தியிருக்கிறார்.
இயக்குநரின் இந்த முயற்சி காரியை வாகை சூட வைத்திருக்கிறது.











