விமர்சனம்

லால்சிங்சத்தா – திரைப்பட விமர்சனம்

பஞ்சாப் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் அப்பா இல்லாமல் அம்மாவின் வளர்ப்பில் வளரும் லால்சிங்சத்தா என்கிற சாதாரண இளைஞனின் கதையைச் சொல்லி அதனூடே இந்திய ஒன்றிய அரசியலையும் தம் விருப்பத்துக்கேற்ற வகையில் இக்காலத்தவர்க்குச் சொல்லியிருக்கும் படம் லால்சிங்சத்தா.

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத
பக்கங்களில்
எழுதிச் செல்கின்றது
ஒரு பறவையின் வாழ்வை

எனும் அழியாப் புகழ்பெற்ற தமிழ்க்கவி பிரமிளின் கவிதை போல் தொடங்குகிறது படம். 

கவியின் காட்சிப்படுத்தல்போல் பறந்து செல்லும் இறகு அமீர்கானின் கைகளில் சேர்ந்ததும் அவர் கதை தொடங்குகிறது.

எதையும் உடனே கிரகித்துக்கொள்ள முடியாதவர் என்று அறிமுகமாகும் அமீர்கான், இராணுவத்தில் சேருகிறார், ஓட்டப்பந்தய வீரராக இருக்கிறார், இந்திய ஒன்றியமே திரும்பிப்பார்க்கும் வகையிலான தொடர் ஓட்டக்காரராக இருக்கிறார். இவை எல்லாவற்றிலும் அமீர்கானின் பிரத்யேக நடிப்பு சிறப்பு.

அமீர்கானின் தோழி ரூபாவாக வரும் கரீனாகபூர் நன்று. துடிப்பும் துள்ளலுமின்றி நிதான நடிப்பிலும் நின்று பேசியிருக்கிறார் கரீனாகபூர்.

இந்திய ஒன்றிய இராணுவத் தேர்வாளர்களைச் சந்தேகப்படும்படியான வேடத்தில் நாகசைதன்யா நடித்திருக்கிறார். கொடுத்த வேடத்தைச் சிரத்தையாகச் செய்திருக்கிறார்.

அமீர்கானின் அம்மாவாக நடித்திருக்கும் மோனாசிங், அவரை ஊக்கப்படுத்துபவராக வரும் மானவ் விஜ் ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள். 

சத்யஜித் பாண்டேவின் ஒளிப்பதிவுக்கருவி பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி காஷ்மீர், தில்லி, இராமேஸ்வரம் உள்ளிட்ட இந்திய ஒன்றியம் முழுதும் பயணப்பட்டிருக்கிறது.

இசையமைப்பாளர் ப்ரீதம் இசையில் பாடல்கள் காட்சிகளோடு இணைந்திருக்கின்றன. பின்னணி இசையில் தாழ்வில்லை.

ஹேமந்த் சர்க்காரின் படத்தொகுப்பு இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஃபாரஸ்ட் கம்ப் எனும் ஆங்கிலப்படத்தின் இந்தியத் தழுவலாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் கதையை அதுல்குல்கர்னி எழுதியிருக்கிறார். அத்வைத் சந்தன் இயக்கியிருக்கிறார்.

லால்சிங்சத்தா எனும் அப்பாவி இளைஞனின் வாழ்வினூடே இந்திராகாந்தி படுகொலை,அதையொட்டி நடந்த சீக்கியர் படுகொலைகள், அத்வானியின் இரத யாத்திரை, வி.பி.சிங்கின் மண்டல் பரிந்துரை அமலாக்கம், வாஜ்பாயி ஆட்சிக்காலம் மட்டுமின்றி போகிற போக்கில் மோடியையும் காட்டுகிறது படம்.

இவற்றில் வெளிப்படும் அரசியல் இந்துத்துவ அரசியலாக இருப்பதும் அதை அமீர்கான் செய்திருக்கிறார் என்பதும் சோகம்.

Related Posts