வீராயி மக்கள் – திரைப்பட விமர்சனம்
குடும்ப உறவுகள் குறித்த படங்கள் அவ்வப்போது வந்துகொண்டேயிருக்கும்.அந்த வரிசையில் வந்திருக்கிறது வீராயிமக்கள். படத்தின் தலைப்பே ஒரு கதையைச் சொல்கிறது. அக்கதையை அட்சரம் பிசகாமல் எடுத்து வைத்திருக்கிறார்கள்.
வேல்.இராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கள் ஆகியோர் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். அன்பும் பாசமுமாய் வளரும் அவர்களுக்குள் ஒரு கட்டத்தில் மோதல்.அதன்பின் எலியும் பூனையுமாய்த் திரிகிறார்கள்.இளையதலைமுறை தாமும் சேர்ந்து அக்குடும்பத்தையும் முன்போல் சேர்த்து வைக்க முனைகிறது. நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.
நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ்நந்தா, கிராமத்து இளைஞன் தோற்றத்துக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.காதல்,சண்டை ஆகியனவற்றை நன்றாகச் செய்திருக்கும் அவர் உணர்ச்சிகரமான நடிப்பிலும் குறை வைக்கவில்லை.
நாயகி நந்தனா எளிய அழகுக்குச் சொந்தக்காரர்.காதல் காட்சிகள் பாடல்காட்சிகளில் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
மூத்த அண்ணனாக நடித்திருக்கிறார் வேல.இராமமூர்த்தி.கோபத்தில் முறுக்கிக் கொண்டு திரிபவருக்கென தனிவிருது இருந்தால் அதை மொத்தமாக அவரிடம் கொடுத்துவிடலாம்.பாசம் காட்டுவதிலும் நிறைவு.
தம்பியாக நடித்திருக்கும் மறைந்த மாரிமுத்து, அவருடைய இழப்பு இட்டு நிரப்ப இயலாதது என்பதை இந்தப்படத்திலும் காட்டியிருக்கிறார்.
கிராமத்து சகோதரி வேடத்துக்கென்றே நேர்ந்துவிடப்பட்டிருக்கும் தீபா சங்கருக்கு இந்தப்படத்திலும் அந்த வேடம்.கதாபாத்திரத்தைத் தாண்டி தன்னையும் காட்டிக்கொண்டிருக்கிறார்.
ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட் மில்டன் ஆகியோரும் விதவிதமான கிராமத்து மனிதர்களைக் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எம்.சீனிவாசன், படத்தில் கூட்டம் அதிகம் என்றாலும் இரசித்துப் பார்க்கிற மாதிரி காட்சிப்படுத்தியிருக்கிறார்.
தீபன்சக்ரவர்த்தி இசையில், தெக்கு தெச நாடு, நெஞ்சுக்குள்ள ஒம்பேர உள்ளிட்ட பாடல்கள் இதமாக அமைந்திருக்கின்றன.பின்னணி இசையிலும் தாழ்வில்லை.
எழுதி இயக்கியிருக்கும் நாகராஜ் கருப்பையா, கருத்து வேறுபாடுகள் பிரிவுகள் ஆகியனவற்றைவிட உறவுகள் முக்கியம் என்பதை வலியுறுத்திப் படமெடுத்திருக்கிறார். அதைப்பாடமாக நடத்திவிடாமல் திரைமொழியில் சொல்லியிருப்பது பலம்.இதுதான் நடக்கும் என்று தெரிந்தவற்றையே அது எப்படி நடக்கும்? என்று பார்க்க வைத்திருப்பது கூடுதல் பலம்.
– இளையவன்











