கம்பி கட்ன கதை – திரைப்பட விமர்சனம்
மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் நட்டியிடம் பல கோடி மதிப்புள்ள ஒரு வைரத்தைத் திருடும் வேலை ஒப்படைக்கப்படுகிறது.வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது போல் நட்டியிடமிருந்தும் அந்த வைரம் களவு போகிறது.கடைசியில் என்னவாகிறது? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல விழைந்திருக்கும் படம் கம்பி கட்ன கதை.
கடமை தவறாத காவல்துறை அதிகாரி வேடமென்றாலும் சரி களவாணி வேடமென்றாலும் சரி என்னால் செய்யமுடியும்? என்று காட்டியிருக்கிறார் நட்டி.சாமியார் வேடம் உட்பட பல தோற்றங்களில் வருகிறார்.சும்மாவே நல்லா பேசும் அவருக்கு அளவுக்கதிகமான வசனங்கள்.பேசித்தள்ளுகிறார்.
இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் முகேஷ் ரவி, காதல்,சண்டை ஆகிய எல்லாவற்றையும் செய்திருக்கிறார்.சரியாகச் செய்திருக்கிறார்.
நாயகன் நட்டிக்கு இணையராக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி அளவாக நடித்திருக்கிறார்.முகேஷ் ரவியின் இணையராக வரும் ஷாலினி பாடல்காட்சிகளில் தாராளம் காட்டியிருக்கிறார்.இருவரும், இளமையும் அழகும் காட்டி இளைஞர்களை ஈர்க்கப் பயன்பட்டிருக்கிறார்கள்.
நட்டியின் சீடராக வரும் சிங்கம் புலி,நிறைய மனைவிகள் வைத்துக் கொண்டு குழந்தை பாக்கியத்துக்கு ஏங்கும் கோதண்டம், கொலை செய்ய முயல்பவராக நடித்திருக்கும் முருகானந்தம்,மொழி பெயர்ப்பாளராக நடித்திருக்கும் ஜாவாசுந்தரேசன் ஆகியோர் சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.அங்கங்கே சிரிக்க முடிகிறது.
ஒளிப்பதிவாளர் ஜெய் சுரேஷ் படத்தை வண்ணமயமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சதீஷ் செல்வம் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் தாழ்வில்லை.
திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியிருக்கும் தா.முருகானந்தம் படத்தைக் காக்க பெரும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்.
ராஜநாதன் பெரியசாமி இயக்கியிருக்கிறார். நட்டியின் சாமியார் வேடத்தை வைத்துக்கொண்டு நித்யானந்தாவை நினைவுபடுத்தும் காட்சிகளை வைத்துள்ளார்.கடைசியில் பொய்லாசா என்கிற தீவுக்கு அவர் அதிபதியாவது போல் வைத்திருப்பது அதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
படத்தின் தலைப்பிலிருந்து எல்லாவற்றிலும் நகைச்சுவையே பிரதானமாக இருக்க வேண்டுமென முடிவு செய்து படத்தை எடுத்திருக்கிறார்.அவர் எண்ணம் முழுமையாக ஈடேறவில்லை.
– இளையவன்











