வீரவணக்கம் – திரைப்பட விமர்சனம்
1940 முதல் 46 வரையிலான காலகட்டம் வெள்ளையர்களை விரட்டியடிக்க வீறுகொண்டு மக்கள் போராடிக் கொண்டிருந்த காலம். அதே காலகட்டத்தில் கொத்தடிமைகளாக கொடூரங்களை அனுபவித்துக் கொண்டிருந்த விவசாயத் தொழிலாளரகளை மீட்க பொதுவுடைமைக் கட்சிகள் போராடிக்கொண்டிருந்தன.
அந்த உண்மைகளை மையமாக வைத்து உருவாகி வெளியாகியிருக்கும் படம் வீரவணக்கம்.
அந்தக் காலகட்டத்தில் பெரும் புரட்சிக்காரராக இருந்த பி.கிருஷ்ணபிள்ளை வாழ்க்கையை உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் அந்த வேடத்துக்கு உருவம் கொடுத்ததோடு உயிரும் கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி.
இன்னொரு பொதுவுடைமைவாதியாக நடித்திருக்கும் பரத், கவனம் ஈர்க்கிறார். அவர் வரும் காட்சிகள் வசனங்கள் மற்றும் அவர் நடிப்பு ஆகியன பலம்.
போராளியாக நடித்திருக்கும் ரித்தேஷ், காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் பிரேம்குமார் மற்றும் மேஷ் பிஷரோடி, சுரபி லட்சுமி, புரட்சி பாடகி பி.கே.மேதினி, அதர்ஷ், ஆய்ஷ்விகா ஆகியோரும் நன்று.
கவியரசுவின் ஒளிப்பதிவில் காட்சிகளில் தெளிவும் நேர்த்தியும் அமைந்திருக்கிறது.அந்தக் காகட்டதைக் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.
இசையமைப்பாளர்கள் எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். பாடல்கள் எழுச்சியூட்டும் வண்ணம் அமைந்திருக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கியிருக்கிறார் அனில் வி.நாகேந்திரன்.ஒரு பொழுதுபோக்குக் கதையை திரைப்படமாக எடுத்து பணம் சம்பாதிப்போம் என நினைக்காமல் இரத்தமும் சதையுமான உணர்வுப்பூர்வமான ஓர் உண்மைக் கதையை திரைமொழியில் எழுதி பார்ப்போர் குருதி கொப்பளிக்கவும் கண்கள் கண்ணீரில் மூழ்கவும் வைத்திருக்கிறார்ர். அதற்காக அவருக்கு செவ்வணக்கம்.
– இளையவன்











