சினிமா செய்திகள்

விக்ரம் பிரேம்குமார் கூட்டணி முறிவு – அடுத்து என்ன?

வீரதீரசூரன் படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தை, 96 மற்றும் மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய பிரேம்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்தப்படத்தை ஐசரிகணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.இந்த அறிவிப்பு ஜூலை மாதம் இறுதியில் வெளியானது.

ஆனால்,இன்னும் அந்தப்படம் தொடங்குவது குறித்து எந்தத் தகவலும் இல்லை.

ஏனென்றால்?

அப்படம் கைவிடப்பட்டுவிட்டது என்கிற அதிர்ச்சித் தகவல் கிடைக்கிறது.

ஆம்,இயக்குநர் பிரேம்குமார் சொன்ன மையக்கதை பிடித்து அவருடைய இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் விக்ரம்.அதை முழுநீளத் திரைக்கதையாக்கிய போது அது விக்ரமுக்குத் திருப்தியாக இல்லை என்று சொல்லப்படுகிறது.ஆனால் இயக்குநருக்கு அதன்மீது முழுநம்பிக்கை இருந்திருக்கிறது.

இதுதொடர்பான உரையாடல்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டதாம்.

அதனால்,அந்தப்படம் நடக்காது என்று சொல்கிறார்கள்.

இப்போது இயக்குநர் பிரேம்குமார் அதே கதையை வேறு கதாநாயகனை வைத்து எடுக்கத் தயாராகிவிட்டாராம்.

அதேபோல் விக்ரமும் வேறு இயக்குநர் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் போய்வுட்டால் தயாரிப்பு நிறுவனம் என்னாவது?

தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு படம் செய்ய இருவருமே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அது மெதுவாகத் தான் நடக்கும்.

இப்போது,விக்ரம் உடனே நடிக்கவிருக்கும் படத்தை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் இயக்கவிருக்கிறாராம்.

அந்தப்படத்தை மாவீரன், 3 பிஎச்கே ஆகிய படங்களைத் தயாரித்த அருண்விஸ்வா தயாரிக்கிறார் என்று சொல்லப்பட்டது.அதுவும் உறுதியாகவில்லை.

அதற்குக் காரணம், பார்க்கிங் இயக்குநர் சிம்புவை வைத்து இயக்குவதாக இருந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.

ஆனால் திடீர் சிக்கல் காரணமாக அந்தப்படம் தடைபட்டது.அதனால், சிம்பு வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார்.அதனால் பார்க்கிங் இயக்குநர் சும்மா இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

இந்நிலையில் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால், அந்தப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்திருக்கிறதாம்.இயக்குநரும் அந்த நிறுவனத்துக்குப் படம் செய்தாக வேண்டும் என்பதால் அந்நிறுவனமே தயாரிக்கட்டும் என்கிற முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் வேகமாக நடந்து வருகின்றன என்றும் விரைவில் எல்லா முடிவுகளும் எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.

Related Posts