விஷால் ஆர்யா நடிக்கும் எனிமி – கடைசிநேரத்தில் நடந்த மாற்றம்
ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி.இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார்.
வினோத் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது.
இடைவெளி விட்டுவிட்டு நடந்த அப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12 ஆம் தேதி நிறைவுற்றதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இப்போது, படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகளில் இருக்கிறார்கள். இந்நிலையில், படத்தின் இசையமைப்பாளர் தமன் படத்திலிருந்து விலகிவிட்டாராம்.
பாடல்கள் போட்டுத் தருவதில் தாமதம் ஏற்பட்டதால் ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்ததாம். இந்நிலையில் படத்துக்குப் பின்னணி இசைச்சேர்ப்பை எப்போது முடிப்பார் என்று தெரியாமல் இருக்கவே, குறிப்பிட்ட நாட்களுக்குள் பின்னணி இசைச்சேர்ப்பை முடித்துக் கொடுக்கவேண்டும் என்று படக்குழுவினர் சொன்னதால், இருக்கிற வேலைப்பளுவில் நீங்கள் சொல்கிற நேரத்துக்குள் என்னால் வேலை செய்யவியலாது என்று தமன் விலகிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
இப்போது பின்னணி இசைச்சேர்ப்பு வேலைகளுக்காக சாம்.சி.எஸ்ஸை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.
அதனால் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் வேகமெடுத்திருக்கின்றன என்கிறார்கள்.












