டி.இமானின் புதிய பயணம் – விவரம்
2002 ஆம் ஆண்டு வெளியான விஜய் நடித்த தமிழன் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் டி.இமான்.அப்போதிருந்து வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் வள்ளிமயில், சுசீந்திரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் 2கே லவ் ஸ்டோரி,பிரபுசாலமன் இயக்கும் மாம்போ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துவருகிறார்.
இந்நிலையில்,அவர் ஒரு புதிய இசை நிறுவனம் தொடங்கவிருக்கிறார்.
டி ஐ சவுண்ட் ஃபேக்டரி எனும் பெயரில் அந்நிறுவனம் தொடங்கப்படவிருக்கிறது.டி.இமான் என்கிற பெயரின் முதல் இரண்டு ஆங்கில எழுத்துகள்தாம் டி ஐ.
தமிழ்த்திரையுலகில் சோனி,திங்க் மியூசிக் ஆகியன உட்பட சில நிறுவனங்கள் திரைப்படப்பாடல்களின் உரிமை பெற்று வருகின்றன.இசையமைப்பாளர்களில், இளையராஜா சொந்தமாக எக்கோ என்ற பெயரில் இசைநிறுவனம் வைத்திருந்தார்.இப்போது யுவன்ஷங்கர்ராஜா யு ஒன் என்கிற பெயரில் இசை நிறுவனம் வைத்திருக்கிறார்.ஏ.ஆர்.ரகுமான் சுயாதீனக் கலைஞர்களுக்காக மாஜா எனும் தளத்தை வைத்திருக்கிறார்.
அவர்களைத் தொடர்ந்து இப்போது தனியாக இசை நிறுவனம் தொடங்கும் இசையமைப்பாளர் வரிசையில் டி.இமான் சேர்ந்திருக்கிறார்.
இந்நிறுவனம் இசைஉரிமை பெற்றிருக்கும் முதல் படம் 2கே லவ் ஸ்டோரி என்று சொல்லப்படுகிறது.
நிறுவனத்தின் தொடக்கவிழா மற்றும் 2கே ல்வ் ஸ்டோரி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகிய இரண்டையும் ஒரு சேர நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
நவம்பர் மாத மத்தியில் அல்லது இறுதியில் இந்நிகழ்வு இருக்குமென்று சொல்லப்படுகிறது.
புதிதாக இசைநிறுவனம் தொடங்கி அதன் முதல்படமாக 2கே லவ் ஸ்டோரியை டி.இமான் தேர்வு செய்திருக்கிறார்.அதற்குக் காரணம், இயக்குநர் சுசீந்திரனோடு இணைந்து டி.இமான் பத்துப்படங்களில் பணியாற்றியிருக்கிறார்.அவை எல்லாமே வெற்றிப்பாடல்களாக அமைந்திருக்கின்றன.
இப்போதும் டி.இமான் கிராமத்துக்கதைகள் மற்றும் பாடல்களில் பெருவெற்றி பெற்றிருக்கிறார்.அந்த அளவு நகரம் சார்ந்த கதைகளில் அவருக்கு அடையாளம் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுவதுண்டு.
இப்போது சுசீந்திரன் இயக்கியிருக்கும் 2கே லவ் ஸ்டோரி படம் முழுக்க முழுக்க நகரம் சார்ந்த நவநாகரிக இளைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லும் கதையைக் கொண்டது.இதில் அவருடைய பாடல்கள் மிகச் சிறப்பாக அமைந்திருப்பதாகப் படக்குழுவினர் சொல்கின்றனர்.
தான் அடையாளம் பெற்ற கிராமத்துப்பாடல்கள் தாண்டி நகரத்து நவநாகரிக இளைஞர்களுக்கான பாடல்களைக் கொண்டிருப்பதால் 2கே லவ் ஸ்டோரி படத்திலிருந்து தன் புதியபயணத்தை இமான் தொடங்குகிறார் என்று சொல்கிறார்கள்.
பயணம் சிறக்கட்டும்.












