சினிமா செய்திகள்

அயலானுக்குக் குரல்கொடுக்க சித்தார்த் பெற்ற சம்பளம் எவ்வளவு?

ஆர்.இரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தில், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

பல்வேறு காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் தாமதமாகின.எல்லாவற்றையும் தாண்டி 2024 பொங்கல்திருநாளையொட்டி இப்படம் வெளியாகவிருக்கிறது.அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பில் இடம்பிடித்திருக்கும் முக்கிய கதாபாத்திரமான ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.

அவர், மூன்றுநாட்கள் இதற்கான குரல்பதிவில் கலந்துகொண்டிருக்கிறார். அவற்றில் ஒன்று இரண்டாவது ஞாயிறு.அந்நாளில் திரைப்படத்துறையினருக்கு விடுமுறை நாள். அந்நாளிலும் குரல்பதிவுக்கு வர சித்தார்த் ஒப்புக்கொண்டதால், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் சிறப்பு அனுமதி வாங்கி குரல்பதிவைச் செய்திருக்கிறார்கள்.

மொத்தமாக முடித்துவிட்டுப் போட்டுப் பார்த்தபோது ஏலியனுக்கு சித்தார்த்தின் குரல் சிறப்பாகப் பொருந்தியிருப்பது தெரியவந்திருக்கிறது.

இதனால் நாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ஆர்.இரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கேஜேஆர் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில்,

அயலான் படத்தின் ஒரு பகுதியாக இருந்து எங்கள் அண்டவியல் அண்டைக்கு உயிர் கொடுத்ததற்கு நன்றி.
உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியன எங்கள் அயலானை மிகவும் எதார்த்தமாகவும் அழகாகவும் மாற்றியுள்ளது. நாங்கள் விரும்பியதைப் போலவே பார்வையாளர்களும் உங்கள் பணியை மெச்சுவார்கள் என்று நம்புகிறோம்.

என்று கூறியுள்ளது.

மிகவும் விருப்பத்துடனும், அன்புடனும் அயலானுக்குக் குரல் கொடுத்து படத்துடன் இணைந்தமைக்கு மனம் நிறைந்த நன்றி சித்தார்த் சார் என்று இயக்குநர் ஆர்.இரவிக்குமார் நெகிழ்ந்திருக்கிறார்,

இப்படத்துக்காக மூன்று நாட்கள் குரல்பதிவு செய்ததற்காக சித்தார்த்துக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு?

ஒரு ரூபாய் கூடச் சம்பளம் பெறாமல் குரல் கொடுத்திருக்கிறார்.அயலான் படக்குழுவினரின் நட்புக்காகவும் ஒரு நல்ல படத்துக்கு என்னாலான சிறு உதவி என்று சொல்லியும் குரல்பதிவு செய்திருக்கிறார் சித்தார்த்.

தானும் ஒரு கதாநாயகன் என்கிற தன்முனைப்பின்றி சித்தார்த் செய்த இந்தச் செயலறிந்தோர் அனைவரும் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

Related Posts