அயலான் இயக்குநருடன் இணைகிறார் சூர்யா
விஷ்ணுவிஷால் நடிப்பில் 2015 இல் வெளியான படம் இன்று நேற்று நாளை. அதன் இயக்குநர் ரவிக்குமார். அப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் ரவிக்குமார்.
அப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமானது. இவ்வாண்டு இறுதியில் அப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டு அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன்.
கோரோனா ஊரடங்கால் எல்லாம் மாறிப்போயிருக்கிற சூழலில் அப்படத்தின் வெளீயீடும் தாமதமாகலாம் என்று சொல்லப்படுகிறது.
இப்படம் தாமதமானதால் இந்த இயக்குநருடன் இணைந்து இன்னொரு படம் செய்வேன் என்று சிவகார்த்திகேயன் கூறியதாகச் சொல்லப்பட்டது.
எனவே அடுத்தும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அயலான் படத்துக்கு அடுத்து சூர்யா நடிக்கும் படமொன்றை இயக்கவிருக்கிறார் ரவிக்குமார் என்று பேசப்படுகிறது.
சூர்யாவுக்கான ஒரு கதையை உருவாக்கி அவரிடம் சொல்லியிருக்கிறார். அவருக்கும் பிடித்துப் போனதாம். அதனால் அருவா, வாடிவாசல் ஆகிய படங்களை முடித்த பின்பு ரவிக்குமார் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என்கிறார்கள்.
இப்படத்தை ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.











